தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த விழாவில் அவர் பேசியவை பின்வருமாறு:
`பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று விருதுகளைப் பெற்ற 385 ஆசிரியர்களுக்கு ஒரு மாணவனாக என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிரியர் பணி என்பது அறிவார்ந்த ஒரு தலைமுறையை உருவாக்கும் ஓர் அறப்பணி.
ஒரு வகையில் பார்த்தால் திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவருமே ஆசிரியர்கள்தான். அவர்கள் தமிழ் சமூகத்துக்கு மானமும், அறிவும் ஊட்ட வந்த ஆசிரியர்கள். அதனால்தான் தந்தை பெரியாரை இன்றும் நாம் அறிவாசான் என்று அழைக்கிறோம். அறிவோடு சேர்த்து மானத்தையும் சொல்லிக்கொடுத்தவர் தந்தை பெரியார்.
பேரறிஞர் அண்ணா பள்ளி ஆசிரியராகவே தன் பணியைத் தொடங்கினார். ஆசிரியர்கள் மீது நம் திமுக அரசுக்கு எப்போதுமே அக்கறை உள்ளது. நேற்று முன் தினம் நம் அரசின் பாடத்திட்டத்தைப் பற்றி ஒருவர் குறை கூறியது உங்களுக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரை மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும் கல்விமுறைதான் சிறந்த கல்விமுறை.
அந்த வகையில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்விமுறைதான் மாணவர்களைச் சிந்திக்க வைக்கின்றன. எதையும் ஏன், எதற்கு எனப் பகுத்தறிவுடன் கேள்வி கேட்க வைக்கின்ற கல்விமுறையாக தமிழ்நாட்டின் கல்விமுறை உள்ளது. தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் படித்த எத்தனையோ நபர்கள் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் ஆகியுள்ளனர்.
வீரமுத்துவேல் போல இஸ்ரோவின் உயரிய பொறுப்புகளிலும் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது நம் கல்விமுறையை யாரும் குறை கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அப்படி யாராவது குறை கூறினால் அது நம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவமதிப்பதற்குச் சமம்’ என்றார்.