தமிழ் மொழிக்குத் திமுக என்ன செய்துள்ளது?: அமித்ஷா கேள்வி

தமிழ் மொழிக்குத் திமுக என்ன செய்துள்ளது?: அமித்ஷா கேள்வி

தமிழகத்தையும், தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.
Published on

தமிழ் தமிழ் என்று பேசும் திமுக, தமிழ் மொழிக்குச் செய்துள்ளவற்றை பட்டியலிட முடியுமா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஏப்.11) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், திமுக ஆட்சி குறித்து அமித்ஷா கூறியதாவது,

`திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ரூ. 39,775 கோடி அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. ரூ. 5,800 கோடிக்கு மேல் தாதுமணல் கொள்ளையும், ரூ. 4,400 கோடியில் மின்சாரத்துறை ஊழலும் நடந்துள்ளன. தமிழக அரசு நிறுவனமான எல்காட்டின் பங்கு விற்பனையில் ரூ. 3,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது.

ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் போக்குவரத்துத்துறையில் ஊழல் நடந்துள்ளது. ஆயிரம் கோடிக்கு மேல் பணமோசடியும், ஊட்டச்சத்து கிட் வழங்குவதிலும், இலவச வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழல்கள் நடந்துள்ளன. அரசு வேலைக்குப் பணம் பெற்றது, செம்மண் கடத்தல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊழல் என்று இதற்கெல்லாம் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மக்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

தமிழகத்தையும், தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம், என்றைக்குமே தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவதில்லை. பிரதமர் மோடி தமிழகத்தின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் மதித்து புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோலை நிறுவினார். ஆனால் திமுக அதை எதிர்த்தது.

தமிழின் பெருமையைப் போற்றும் வகையில் காசி தமிழ்ச்சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்ச்சங்கமம் ஆகியவற்றைப் பிரதமர் மோடி முன்னெடுத்தார். அவரது நடவடிக்கையால் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இணைக்கப்பட்டது.

தமிழ் மொழியை வளர்ப்பதற்காக மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசின் முயற்சியால் ஹௌஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கப்பட்டது. எங்கள் முன்னெடுப்பால் 63 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் அனைத்துப் படைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேர்தெடுக்கும் குடிமைப்பணித் தேர்வுகளை இன்று தமிழில் எழுத முடிகிறது. மத்தியில் திமுக ஆட்சியில் இருந்தபோது இந்த நிலை இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள மாநிலங்களில், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளைத் தாய்மொழியில் படிக்கும் நிலை உள்ளது.

தமிழகத்திலும் அவ்வாறு மேற்கொள்ளுமாறு கடந்த மூன்று ஆண்டுகளாக நான் ஸ்டாலினிடம் கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை அவ்வாறு நடக்கவில்லை. தமிழ் தமிழ் என்கிறார்களே, தமிழ் மொழிக்குத் திமுக என்ன செய்துள்ளது என்பதை தமிழக மக்கள் முன்பு அவர்களால் பட்டியலிட முடியுமா?’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in