
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அரசுப் பணியாளரின் ஊதிய விவரங்களைக் கேட்டுப்பெற உரிமையுண்டு என மாநிலத் தகவல் ஆணையர் மா. செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்ட ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் கணேஷ். இவருடைய மனைவி பெயர் பிருந்தா. இவர்கள் இருவரும் கடந்த 2023-ல் அம்பத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளார்கள்.
விவாகரத்து பெறுவதற்கு முன்பே, டிசம்பர் 3 2021-ல் தனது கணவரின் ஜனவரி 1, 2021 முதல் நவம்பர் 30, 2021 வரையிலான ஊதிய விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரியிருந்தார் பிருந்தா.
உரிய காலக்கெடுவில், இவர் கோரிய ஊதிய விவரங்கள் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்கும் தீர்வு காணப்படவில்லை. இதனால், இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பினார்.
இதை விசாரித்த மாநிலத் தகவல் ஆணையர், டிசம்பர் 31, 2021 அன்று தெரிந்தே தவறான தகவல்களை வழங்கிய பொதுத் தகவல் அலுவலர் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வியெழுப்பினார். மேலும், இதுதொடர்பாக உரிய பொது தகவல் அலுவலர் விளக்கம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 32 மாதங்களாக பிருந்தா கோரிய தகவல்களை வழங்காமல் இருந்து வருவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, இழப்பீடாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் என்கிற பொது அதிகார அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்புடைய உத்தரவில் மாநிலத் தகவல் ஆணையர் மா. செல்வராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
"அரசுப் பணியாளரின் ஊதியம் குறித்த தகவல்கள் மூன்றாம் தரப்பினரின் தனி நபர் குறித்த தகவல்கள் அல்ல. பொது அதிகார அமைப்பிலுள்ள பணியாளர், பொது அதிகார அமைப்பின் ஒரு பகுதியே தவிர, மூன்றாம் தரப்பினர் அல்ல. அரசுப் பணியாளர்களின் ஊதிய விவரங்கள் பொது அதிகார அமைப்பினால் தாமாக முன்வந்து வெளியிட வேண்டிய தகவல்களாகும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இந்தத் தகவல்களைக் கேட்டுப்பெற உரிமையுண்டு. அதேபோல, அரசுப் பணியாளரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் பொது சேம நல நிதிக்கான சந்தாத் தொகை, அவர் பெற்றுள்ள கடன்களுக்காகப் பிடித்தம் செய்யப்படும் தொகை போன்ற விவரங்கள் தனி நபர் குறித்த விவரங்களாகும். இந்த விவரங்களை வழங்கிட வேண்டியதில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.