உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பி குடியரசுத் தலைவர் கடிதம்!
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக்கும் காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி சுமார் ஒரு மாத காலம் கடந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்த கடிதத்தில், ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்துள்ளது குறித்து பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள 14 கேள்விகள்:
1) அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதாவை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு வாய்ப்புகள் என்னென்ன?
2) ஒரு மசோதாவை ஆளுநர் முன் சமர்ப்பிக்கும்போது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் அவருக்கு உள்ள வாய்ப்புகளை உபயோகப்படுத்துவதில், அமைச்சரவையால் வழங்கப்படும் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுவாரா?
3) இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு விருப்புரிமையை (discretion) ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா?
4) அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிரான நீதித்துறையின் ஆய்வுக்கு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361 முழுமையாக தடை விதிக்கிறதா?
5) காலக்கெடு குறித்தும், ஆளுநருக்கான அதிகாரம் பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்படாத நிலையில், பிரிவு 200-ன் கீழ், நீதிமன்றங்களின் உத்தரவுகள் மூலம் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கவும், அவர் செயல்படுவதற்கான பரிந்துரைகளை வழங்கவும், முடியுமா?
6) அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
7) காலக்கெடு குறித்தும், குடியரசுத் தலைவருக்கான அதிகாரம் பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்படாத நிலையில், பிரிவு 201-ன் கீழ், நீதிமன்றங்களின் உத்தரவுகள் மூலம் குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு விதிக்கவும், அவர் செயல்படுவதற்கான பரிந்துரைகளை வழங்கவும், முடியுமா?
8) ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போது அல்லது கிடப்பில் வைக்கும்போது, குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில், சட்டப்பிரிவு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையையும், கருத்தையும் பெற குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?
9) சட்டப்பிரிவுகள் 200 மற்றும் 201-ன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் அளிக்கும் ஒப்புதலின்பேரில் ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் நீதிமன்றங்கள் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பு வழங்க அனுமதி உள்ளதா?
10) குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள், உத்தரவுகள் போன்றவற்றுக்கு ஈடாக எந்த வகையிலாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-க்கு அதிகாரம் உள்ளதா?
11) மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?
12) இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 145(3)-ன் கீழ், உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன்னர் உள்ள வழக்கில் அரசியலமைப்பு விளக்கம் தொடர்பான சட்ட கேள்விகள் உள்ளதா என்பதை முதலில் முடிவு செய்து, பின்னர் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?
13) இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 143-ன் கீழ், உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், நடைமுறைச் சட்டம் தொடர்பான விஷயங்கள் மீது மட்டும் முடிவெடுக்க முடியுமா? அல்லது அரசியலமைப்பு சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் போன்றவற்றுக்கு முரணான உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா?
14) இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 131-ன் கீழ் வழக்கு தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு வேறு எந்த வழிமுறையையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா?