சிஏஏ-வால் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது: அண்ணாமலை

தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக பாஜக அறிவித்திருந்தது. மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2019-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சமயத்திலேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன.

இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2021 செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டம் தற்போது அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல என அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

"குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, வழக்கம்போல தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இதுபற்றி எதுவும் தெரியாமல், புரியாமல், அவர்களாக ஒரு யூகம் வைத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டு பேசி வருகிறார்கள்.

இந்தியாவுக்கு அருகாமையிலுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள், தங்களை இஸ்லாமிய குடியரசு நாடுகளாக அறிவித்துள்ளன. இந்த மூன்று நாடுகளில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சீகள், ஜெயினர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் ஆகியோர் மத சிறுபான்மையினர்கள். இந்த நாடுகளில் மதத்தின் காரணமாக யாருக்கெல்லாம் சில சலுகைகள் மறுக்கப்பட்டதோ, அவர்கள் வேறுவேறு காலகட்டத்தில் நம் நாட்டுக்குள் வந்துவிட்டார்கள். அவர்கள் அகதிகளைப்போல முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதற்காக 2019-ல் சட்டம் கொண்டு வந்தோம்.

இந்த மூன்று நாடுகளிலிருந்து மத சிறுபான்மையினர்கள் 2014 டிசம்பர் 31-க்கு முன்பு இந்தியாவுக்கு வந்திருந்தால், அவர்கள் குடியுரிமையைப் பெற 14 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்பதல்ல. 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால்போதும்.

உள்துறை அமைச்சகம் 2021-22 வருடாந்திர அறிக்கையில், 2019-க்குப் பிறகு இந்த மூன்று நாடுகளிலிருந்து வந்த 1,414 பேருக்கு நாம் குடியுரிமையைக் கொடுத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள அரசியல் கட்சி, வெறுமென அறிக்கையை விடாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் என்ன தவறைக் கண்டுபிடித்தீர்கள், 39 பக்கங்களில் எந்த அம்சத்தில் தவறு இருக்கிறது என்பதைக் கூற வேண்டும். இந்தச் சட்டம் யாருக்கு எதிரானது என்பதை எதிர்க்கட்சிகள் விளக்க வேண்டும். இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களுக்குக் குடியுரிமை பறிக்கப்படுகிறது என எந்தச் சட்டம் சொல்கிறது, இந்தச் சட்டத்தில் எந்த அம்சம் அதை விளக்குகிறது என்பதைக் கூற வேண்டும்.

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதிகளைப் பொறுத்தவரை என்ன நிலைப்பாடு என்ற கேள்வி எழலாம். 1986-ல் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. இதைதான் தமிழக அரசு பின்பற்றி வருகிறது.

இலங்கையிலிருந்து யார் அகதிகளாக வந்திருக்கிறார்களோ, அவர்கள் இலங்கையில் பிரச்னை சீரானவுடன் மீண்டும் இலங்கை திரும்பிட வேண்டும் என்பதுதான் 1986-ல் எடுக்கப்பட்ட நிலைப்பாடு. இதைத் தாண்டியும் 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்குக் குடியுரிமை கொடுத்திருக்கிறோம்.

ஆகவே, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் செய்யும் பெரிய பாவம், மக்களைக் குழப்பி, திசை திருப்பி, எதையும் பேசாமல் மேம்போக்காக இரண்டு பக்கங்களுக்கு அறிக்கையை வெளியிடுகிறார்கள். இந்தச் சட்டத்தின் மூலம் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது" என்றார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in