இடைத்தேர்தல் முடிவுதான் மக்களின் மனநிலை என்று நினைத்தால் அது தவறு: அண்ணாமலை

இடைத்தேர்தலைப் பொறுத்தவரை பல அமைச்சர்கள் வேலை பார்க்கிறார்கள். அத்துமீறல்கள், முறைகேடுகள் இப்போதைய இடைத்தேர்தல்களில் சர்வ சாதாரணமாக போய்க்கொண்டிருக்கிறது
இடைத்தேர்தல் முடிவுதான் மக்களின் மனநிலை என்று நினைத்தால் அது தவறு: அண்ணாமலை
1 min read

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விக்கிரவாண்டியில் திமுக வெற்றியை முன்வைத்து, `இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால் அது தவறு’ என்று அவர் கருத்து தெரிவித்தார். அண்ணாமலை அளித்த பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு:

`இடைத்தேர்தல் முடிவுகள் எப்போதுமே ஆச்சரியம்தான். தமிழகத்தை பொருத்தவரை இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சியை சார்ந்து போகிறது. அதன் பிறகு ஒரு வருடத்தில் திரும்ப (பொது) தேர்தல் வந்தபோது முழுமையாக முடிவுகள் மாறியிருக்கின்றன. இதைத் தமிழகத்தில் முன்பு பல முறை பார்த்திருக்கிறோம். இந்த முறையும் அப்படித்தான் வந்திருப்பதாக நாங்கள் பார்த்திருக்கிறோம்.

இடைத் தேர்தலைப் பொறுத்தவரை பல அமைச்சர்கள் வேலை பார்க்கிறார்கள். அத்துமீறல்கள், முறைகேடுகள் இப்போதைய இடைத்தேர்தல்களில் சர்வ சாதாரணமாக போய்க்கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்றால் அது தவறு. ஏனென்றால் இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை. இப்போதும் அப்படி இருக்கப்போவது கிடையாது. ஆனால் விதண்டாவாதம் பேசினாலும் மக்களின் முடிவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(எங்களுக்கு) வாக்களித்த மக்களுக்கு நன்றி. அரசின் அதிகார பலம், பண பலம், படை பலத்தைத் தாண்டி இத்தனை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக வருகின்ற காலம் மாறும். இந்த ஆட்சி 2026-ல் தன்னுடைய பலத்தை இழக்கும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது எத்தனை இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்றார்கள், ஆனால் பொதுத்தேர்தலில் என்ன ஆனது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

87 % இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்கே வெற்றி கிடைக்கிறது. இந்தியா முழுவதும் ஆளும் கட்சியை சார்ந்து மக்கள் போகிறார்கள். இருந்தாலும் தேர்தல் முடிவுகளை தலைவணங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in