ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் பேட்டியளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் கைது!
1 min read

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இக்கொலை தொடர்பாக 8 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடப்பதன் காரணமாக அயனாவரத்தில் தற்காலிகமாக வசித்து வந்தார். அவர், நாள்தோறும் பெரம்பூருக்கு வந்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு வந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு வாசலில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, கிரீம்ஸ் சாலையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவருடைய உயிர் பிரிந்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அரசுப் பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. இதையடுத்து செம்பியம் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் பேட்டியளித்துள்ளார். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என அறியப்படுகிறது.

வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2006-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு கவுன்சிலரானார். 2007-ல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அம்பேத்கர் கருத்தியலைப் பிரதிபலிக்கும் முக்கியமான குரலாக அறியப்படுகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in