ஆம்ஸ்ட்ராங்கின் அடக்கம் தொடர்பான வழக்கு: நாளை காலை விசாரணை

நாளை காலை 8.30 மணி அளவில் உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், பொற்கொடி தாக்கல் செய்த ரீட் மனு மீது விசாரணை நடத்தவுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் அடக்கம் தொடர்பான வழக்கு: நாளை காலை விசாரணை
ANI

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு 7 மணி அளவில் பெரம்பூரில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இன்று காலை 9 மணி அளவில் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு உடற்கூராய்வு செய்து முடிக்கப்பட்டது.

உடற்கூராய்வு முடிந்தாலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கொடுத்தால்தான் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.

இந்தக் கோரிக்கைக்கு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி கிடைக்கவில்லை. எனவே ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியின் பெயரில் அவரது உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் புதைக்க அனுமதி கேட்டு, உயர் நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து ரீட் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் மாநகராட்சி வழக்குகளை விசாரிக்கும் சென்னை மாநகர சிவில் நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் முடிவு நாளை காலைதான் தெரியும் என்பதால், ஆம்ஸ்ட்ராங்கின் உடலைப் பெற்றுக் கொள்ளச் சம்மதித்தார் அவரது மனைவி பொற்கொடி. பிறகு மருத்துவமனையில் பெற்றப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஆம்புலன்ஸில் வைத்து ஊர்வலமாக அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில் நாளை காலை 8.30 மணி அளவில் உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் பொற்கொடி தாக்கல் செய்த ரீட் மனு மீது விசாரணை நடத்துவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in