நேற்று (அக்.11) இரவு திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டைக்கு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெறுவதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தகவல் அளித்துள்ளார்
பீஹார் மாநிலத்தின் தர்பாங்காவை நோக்கிச் செல்லும் பாக்மதி விரைவு ரயில் நேற்று காலை 10.30 மணிக்கு கர்நாடக மாநிலத்தின் மைசூரூ ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதனை அடுத்து நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்தின் கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகே பாக்மதி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தபோது, ஏற்கனவே அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில் ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் துரிதமாக மீட்கப்பட்டு வெவ்வேறு அரசு மருந்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து நேற்று இரவு தொடங்கி விபத்து நடந்த பகுதியில் கொட்டும் மழையிலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மீட்புப் பணிகளால் சென்னை கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் செல்லும், திருப்பதி-புதுச்சேரி, சென்னை சென்ட்ரல்-திருப்பதி, சூல்லூர்பேட்டை-நெல்லூர், கடப்பா-அரக்கோணம், விஜயவாடா-சென்னை, சென்னை-தில்லி (தமிழ்நாடு விரைவு ரயில்) உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கிரேன்களை உபயோகித்து தொடரும் மீட்புப் பணிகள் இன்று மாலைக்குள் நிறைவுபெறும் எனத் தெரிகிறது. அதே நேரம் இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் மனித சதியால் ரயில் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடுமா என்ற கோணத்தில் ஆராய ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மோப்ப நாயை வரவழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு ரயில்வே துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய, 5 உயரதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்து தொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபத்து ஏற்பட்டதற்குக் காரணம் சதியா அல்லது மனிதத்தவறா என்பதை இப்போதே கூறமுடியாது என இன்று (அக்.12) காலை தகவல் தெரிவித்துள்ளார் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி.
இந்த ரயில் விபத்து தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, `ஒடிஷா மாநிலம் பாலசோரில் நடைபெற்றுள்ள விபத்தைப் போலவே மைசூரூ-தர்பாங்கா ரயில் விபத்து நடைபெற்றுள்ளது.
பல்வேறு விபத்துகளில் ஏகப்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லை. பொறுப்புணர்வு மேலமட்டத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்த அரசு விழிப்பதற்கு முன் இன்னமும் எத்தனை குடும்பங்கள் சீரழிய வேண்டும்?’ என்றார்.