
சென்னை திருவான்மியூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.
திருவான்மியூரில் உள்ள திருவள்ளுவர் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் சந்தேகத்துக்குரிய நபர்கள் ஏடிஎம் மையத்தின் பாதுகாப்பு அமைப்பைக் கையாள முயற்சித்திருக்கிறார்கள். கொள்ளையர்களின் முயற்சியை அடுத்து, ஏடிஎம் கருவியில் இருந்து எச்சரிக்கை சென்றுள்ளது.
உடனடியாக சென்னை நகர காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலையடுத்து, காவல் துறையினர் உடனடியாக ஏடிஎம் மையத்துக்கு விரைந்தார்கள். ஏடிஎம் கருவியில் சேதத்தை உண்டாக்கி பணத்தை எடுப்பதற்குள் காவல் துறையினர் இவர்களைச் சுற்றிவளைத்து கைது செய்ததாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்குப் பல கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சென்னை வந்து ஏடிஎம் மையங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடைய கொள்ளை முயற்சி திரைப்பட பாணி நூதன முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏடிஎம் கருவியில் பணம் வரும் இடத்தில் அட்டை மாதிரியான சாதனை வைத்து விடுவதாகத் தெரிகிறது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முயற்சித்தால், பணம் வந்ததாகப் பதிவாகும். ஆனால் பணம் வெளியில் வராது. இந்தப் பணம் கருவிக்குள் கீழே வேறோர் இடத்தில் கிடக்கும். அப்பணத்தை வாடிக்கையாளர்கள் சென்ற பிறகு, கொள்ளையர்கள் எடுத்துச் செல்வதாகக் காட்சி ஊடகங்களில் செய்தி வெளியாகிறது.
இதுபற்றிய கூடுதல் விவரங்கள் விசாரணைக்குப் பிறகு முழுமையாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.