அன்று விடுதலைப் புலிகள், இன்று அண்ணாமலை: திமுகவின் 'நூல் அச்சம்' பற்றி பத்ரி சேஷாத்ரி

விடுதலைப் புலிகள் தொடர்புடைய புத்தகம் தங்களுடைய வாக்குகளைப் பாதிக்கும் என திமுக - காங்கிரஸ் எண்ணியது...
அன்று விடுதலைப் புலிகள், இன்று அண்ணாமலை: திமுகவின் 'நூல் அச்சம்' பற்றி பத்ரி சேஷாத்ரி

விடுதலைப் புலிகள் புத்தகம் குறித்து அன்று அச்சப்பட்ட திமுக - காங்கிரஸ் கூட்டணி, இன்று அண்ணாமலையின் புத்தக வெளியீட்டு விழாவைத் தடுத்த முயல்கிறது என்று கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையின் அரசியல் பயணம், அண்ணாமலை எனும் திருப்புமுனை என்கிற பெயரில் தமிழிலும் The Idea called Malai என்கிற பெயரில் ஆங்கிலத்திலும் முறையே கிழக்கு மற்றும் ஆக்சிஜன் புக்ஸ் ஆகிய பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நூலின் விலை ரூ. 250. நூலாசிரியர் சுரேஷ் குமார், இதற்கு முன்பு மூன்று நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

கோவையில் நாளை நடைபெறவிருந்த 'அண்ணாமலை எனும் திருப்புமுனை' நூல் வெளியீட்டு விழாவுக்கும் அரசியல் சார்ந்த ஒரு நிகழ்வுக்கும் காவல்துறையின் ஆட்சேபனையின் பேரில் தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கிழக்கு பதிப்பக்கத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி, எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

“2008-ல் மருதன் எழுதிய விடுதலைப் புலிகள் என்கிற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. அந்த இயக்கத்தின் தோற்றம் உள்பட நேரடியான தகவல்கள், அப்போது இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரின் நிலவரம் என்கிற விவரங்களை கொண்ட புத்தகம் அது. குறுகியக் காலக்கட்டத்தில் அந்தப் புத்தகம் நன்றாக விற்பனை ஆனது. 2009 ஏப்ரல், மேயில் இலங்கையில் போர் தீவிரமாக இருந்தது. அப்போது இங்கு மக்களவைத் தேர்தலுக்கான நேரம்.

2009-ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்திருந்தது. தேர்தலுக்கு முன்னதாக க்யூ பிராஞ்ச் அதிகாரிகள் எங்களது அலுவலகத்துக்கு வந்து விடுதலைப் புலிகள் தொடர்புடைய இரு புத்தகங்களின் அனைத்துப் பிரதிகளையும் எடுத்துச் சென்றார்கள். இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். நான் நேரில் சென்று, இந்த புத்தகத்தில் பிரச்னைக்குரிய விஷயம் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தேன். அவர்கள் இதைக் கேட்கவில்லை. நாங்கள் சொல்லும் வரை புத்தகத்தை விற்கக்கூடாது என உத்தரவிட்டனர், ஆனால் எழுத்தில் அல்ல. இதன்பிறகு அப்போது க்யூ பிராஞ்சின் தலைவராக இருந்த அசோக் குமாரைச் சந்திக்கும்படி கூறினார்கள்.

அவரைச் சில நாள்களுக்குப் பிறகு சந்தித்தேன். தான் புத்தகத்தை முழுவதுமாகப் படித்ததாகவும் ஆட்சேபத்துக்குரிய விஷயங்கள் அதில் எதுவும் இல்லை என்றார். அதேசமயம், தேர்தல் முடியும்வரை புத்தகம் விற்பனையில் இருக்கக் கூடாது என்று அரசியல் தலைவர்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். சட்டத்துக்கு விரோதமான இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவு செய்தேன். இறுதியில் நாங்கள் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டோம். தேர்தல் முடியும்வரை, அடுத்த ஒரு மாதத்துக்கு புத்தகத்தை விற்கவேண்டாம், அதன்பிறகு விற்பனையைத் தொடரலாம் என முடிவெடுத்தேன்.

விடுதலைப் புலிகள் தொடர்புடைய புத்தகம் தங்களுடைய வாக்குகளைப் பாதிக்கும் என திமுக - காங்கிரஸ் எண்ணியது (ஆஹா!). தேர்தலும் முடிந்தது. பிறகு பிரபாகரனும் கொல்லப்பட்டார், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கதையும் முடிந்தது.

இப்போது, மற்றொரு நூல். இந்தமுறை அண்ணாமலை பற்றி. இப்போது, அந்நூலின் வெளியீட்டு விழாவைத் தடுத்து நிறுத்த முயல்கிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in