
கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தான் முதல் குற்றவாளி என்பதை தான் ஏற்க மாட்டேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல்கள் கூறப்பட்டு வருகின்றன.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"உயிரிழந்தவர்களின் உயிர்கள் திரும்ப வரப்போவதில்லை. அவர்களுக்கு நாம் எல்லோரும் துணை நிற்க வேண்டும். அரசாக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட கட்சியாக இருந்தாலும் சரி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
எனவே தான் கரூர் மாவட்ட பாஜக தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துள்ளோம். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் தற்போது தான் தொலைபேசி வாயிலாக நான் கூறினேன். உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு ஆறுதலாக கரூர் மாவட்ட பாஜக தலா ரூ. 1 லட்சத்தை அடுத்த 10 நாள்களில் அவர்களுடைய இல்லத்துக்குச் சென்று வழங்க முடிவெடுத்துள்ளோம்.
கரூரில் இந்தச் சம்பவம் நேற்று நடந்து முடிந்து 24 மணி நேரத்துக்குப் பிறகு பேசுகிறோம். இதில் பல தவறுகள், பல குளறுபடிகள் நடந்துள்ளன. எல்லா இடங்களிலும் பொதுமக்கள் கூடும்போது சரியான இடத்தை ஒதுக்குகிறோமோ, சரியான அளவில் காவல் துறையினரை பணியமர்த்துகிறோமா, சரியான முறையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறோமா என்றால் இல்லை.
கரூர் சம்பவத்துக்கு எங்களுடைய முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான். காரணம், சரியான இடத்தைக் கொடுப்பது அவர்களுடைய கடமை. சரியான இடம் இல்லாமவிட்டால், அனுமதியைக் கொடுக்க வேண்டாம்.
தவெகவினர் முதலில் கேட்ட இடம் லைட்ஹவுஸ் ரவுண்டானா, உழவர் சந்தை அருகே கேட்டுள்ளார்கள். முதல் தவறு உள்ளூர் நிர்வாகம். மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் சரியான இடத்தைத் தேர்வு செய்யவில்லை.
பணியமர்த்தப்பட்ட காவல் துறையினர் 500 பேர் என்று பொறுப்பு டிஜிபி பேட்டியளிக்கிறார். ஆனால், 500 பேர் இல்லை. களத்திலிருந்த காவலர்கள் மொத்தம் 100 பேர் கூட இல்லை. ஆம்புலன்ஸ் செல்லாத ஒரு சாலையைக் கொடுத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.
முதல்வர் பதவி விலக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகிறார். இந்தக் கருத்தை ஏன் அவர் வைக்கிறார்? தமிழ்நாட்டில் மக்கள் அதிகளவில் சேரக்கூடிய எந்த இடத்திலும் திமுக தனது 4 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் எதையும் சரிவர கவனிக்கவில்லை. சம்பவம் நடந்த பிறகு வருவதற்கு முதல்வரா? எனவே, நயினார் நாகேந்திரன் கருத்தில் நியாயம் இருப்பதாகப் பார்க்கிறேன்.
ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உடனடியாக சிபிஐ விசாரணை தேவை. அந்தக் கூட்டத்தில் யாராவது தூண்டிவிட்டார்களா, விஷக் கிருமிகள் யாராவது பங்கேற்று தூண்டிவிட்டார்கள், ஆம்புலன்ஸ் எப்போது வந்தது, காவல் துறை தடியடி நடத்தியது ஏன், மின்சாரம் துண்டிக்கப்பட்டது ஏன் என எல்லா விஷயங்களையும் சிபிஐ நுணுக்கமாகக் கண்காணித்து கண்டறிய வேண்டும். காரணம், ஒரு கூட்டத்தில் தலைவரைப் பார்க்க வந்த ஒருவர் செருப்பு வீச மாட்டார்.
கடைசியாக, எங்களுடைய குற்றச்சாட்டு விஜய் மீது. சினிமா நட்சத்திரத்தைப் பார்க்க கிராமங்களிலிருந்து கூட்டம் வரத்தான் செய்யும். ஒட்டுமொத்த கரூருக்கும் சேர்த்து ஒரு இடத்தில் தான் பேசுகிறீர்கள். அதுவும் வார இறுதியில் சனிக்கிழமை கூட்டத்தை வைக்கிறீர்கள்.
கூட்டத்தை சனிக்கிழமை நடத்தும்போது குழந்தையைக் கூட்டிக்கொண்டு தான் மக்கள் வருவார்கள். எனவே, விஜய் இதை யோசிக்க வேண்டும். என் கூட்டத்தில் யாராவது இறக்க வேண்டும் என யாரும் வர மாட்டார்கள். விஜய்-க்கும் அதுபோன்ற மனப்பான்மையெல்லாம் கிடையாது. தவெகவை பொறுத்தவரை தற்போது தான் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வருகிறார்கள். பிறகு யார் கூட்டத்தையெல்லாம் கட்டுப்படுத்துவார்கள். விஜய் இதை உணர வேண்டும். வார இறுதியில் கூட்டத்தை நடத்துவதால் தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளார்கள். வார இறுதியில் மாநாடு தேவையா, ஒரு இடத்தில் மட்டும் பேசுவது சரியா என்பதை விஜய் ஆராய வேண்டும்.
விஜய் தான் முதல் குற்றவாளி என்பதை நான் ஏற்க மாட்டேன். கூட்டத்துக்கு வரச் சொல்லி விஜய் சொல்லலாம். கூட்டத்துக்கானப் பாதுகாப்பைக் கொடுப்பதும் அனுமதியைக் கொடுப்பதும் அரசு கடமை. அனுமதி இல்லையென்றால் இல்லையென்று கூற வேண்டும். தேவைப்பட்டால் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கிக் கொள்ளட்டும் அல்லது வேறு இடத்தில் அனுமதி கொடுங்கள். விஜய்-க்கும் சரியான அனுமதியைக் கொடுக்க வேண்டும், வரும் மக்களையும் பாதுகாக்க வேண்டும். இதை அரசு சரியாகச் செய்யவில்லை.
விஜய் இன்று பெரும் வருத்தத்தில் இருப்பார். எல்லோரும் சேர்ந்து அவரை ஓரங்கட்ட வேண்டாம். அவர் இதிலிருந்து மீண்டு வர வேண்டும். தலைவர்கள் இதையெல்லாம் தாண்டி தான் வர வேண்டும். எல்லா மக்களுக்கும் ஆறுதலாக விஜய் நிற்க வேண்டும். நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள், நிற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒருநபர் ஆணையத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருநபர் ஆணையத்திலுள்ள நீதிபதியைத் தேர்வு செய்வது முதல்வர் தான். அதில் ஓரவஞ்சனை உள்ளது. அதேசமயம், நீதிபதி பற்றி எனக்குக் குற்றச்சாட்டு இல்லை" என்றார் அண்ணாமலை.
Karur | Karur Stampede | TVK Vijay | Vijay | Karur BJP | Tamil Nadu BJP | BJP |