தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்: பிரசாந்த் கிஷோர்

"மேற்கு வங்கத்தில் பாஜக முதலிடத்தைப் பிடிக்கப்போகிறது."
பிரசாந்த் கிஷோர் (கோப்புப்படம்)
பிரசாந்த் கிஷோர் (கோப்புப்படம்)ANI

மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என தேர்தல் வியூத நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. இண்டியா கூட்டணிக் கட்சிகள் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற பெரும் கூட்டணியை அமைத்துப் போட்டியிடுகின்றன.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. போட்டியானது திமுக மற்றும் அதிமுக இடையேதான் என்பதை இரு திராவிடக் கட்சிகளும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன. பாஜக தங்களுடைய செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், மோடியின் தமிழ்நாடு வருகை வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளதாகவும் மிகுந்த நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் முதன்முறையாக இரட்டை இலக்கத்தை அடையும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

"கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் பாஜக கூடுதல் இடங்களில் வெற்றி பெறும். பாஜகவின் வாக்கு சதவீதம் பெரிதளவில் அதிகரிக்கும். குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இது மிக முக்கியம்.

ஓராண்டுக்கு முன்பே கூறியிருந்தேன். தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கியானது முதன்முறையாக இரட்டை இலக்கத்தை அடையுவுள்ளது.

தெலங்கானாவில் பாஜக முதல் அல்லது இரண்டாம் இடத்தைப் பிடிக்கும். இது மிகப் பெரிய விஷயம். ஒடிசாவில் பாஜக முதலிடத்தைப் பிடிப்பது உறுதி. நீங்கள் ஆச்சர்யப்படலாம், மேற்கு வங்கத்தில் பாஜக முதலிடத்தைப் பிடிக்கப்போவதாக என் மனதுக்குத் தோன்றுகிறது" என்றார் பிரசாந்த் கிஷோர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in