
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று அறிவித்துள்ளார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள வரும் மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டியுள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து இன்று (மார்ச் 1) அண்ணாமலை கூறியதாவது,
`மார்ச் 5-ல் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 45 கட்சிகளை அழைத்துள்ளார். கட்சி மட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். அதற்கான காரணத்தை கடிதம் வாயிலாக முதலமைச்சருக்கு அனுப்பியிருக்கிறோம்.
முதல்வர் அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதமாக அதை நாங்கள் அனுப்பியிருக்கிறோம். எந்த ஒரு மாநிலத்திற்கும் யாரும் அநியாயம் செய்வதாக இல்லை. அதிலும் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் அநியாயம் இழைக்கமாட்டார். அப்படி இருக்கும் வேளையில் எதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்கிற கேள்வியை அதில் முன்வைத்துள்ளோம்.
இத்தனை மக்களவை இடங்கள் இருக்கும், அதில் தமிழகத்திற்கு இவ்வளவுதான் கூடுதலாக ஒதுக்கப்படும் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று முதல்வருக்குக் கேள்வி எழுப்பியுள்ளோம்.
மக்களின் அடிப்படை பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை பற்றி பேசுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டியதுதானே இல்லாத ஒரு விஷயத்திற்காக எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்?
தமிழக மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் மார்ச் 5-ல் தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும். மே இறுதிவரை இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி ஒரு கோடி கையெழுத்தை பெற்று குடியரசுத் தலைவரிடம் அளிப்பதே எங்கள் நோக்கம்’ என்றார்.