25% வாக்குகளை அள்ளுவோம்: அண்ணாமலை உறுதி!

"வாக்கு எண்ணிக்கையின்போது என்னை அழைத்து நீங்கள் கேட்கலாம்." - அண்ணாமலை சவால்
25% வாக்குகளை அள்ளுவோம்: அண்ணாமலை உறுதி!
ANI

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 25 சதவிகித வாக்குகளைப் பெறுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் நௌ செய்தி தொலைக்காட்சி பப்ளிக் மஞ்ச் எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. முதல் தலைமுறை வாக்காளர்களைக் கவனத்தில்கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி சென்னையிலும் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் பாஜக எத்தனை சதவிகித வாக்குகளைப் பெறும் என்று தொகுப்பாளர் கேள்வியெழுப்பினார்.

தொகுப்பாளர்: தமிழ்நாட்டில் பாஜகவின் முகமாக மாறியிருக்கிறீர்கள். பாஜக தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட்டபோதெல்லாம் 5.5 சதவிகித வாக்கு வங்கியைத் தாண்டியதில்லை. இந்த முறை எத்தனை சதவிகித வாக்கு வங்கியை எதிர்பார்க்கிறீர்கள், புதுவை உள்பட 40 தொகுதிகளில் எத்தனை இடங்களைக் கைப்பற்ற முடியும் என நினைக்கிறீர்கள்?

அண்ணாமலை: தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டியாக இருப்பதால் கடினமான தேர்தல். ஒருபுறம் திமுக கூட்டணி. கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கூட்டணியில் மாற்றம் இல்லை. தொகுதிப் பங்கீட்டையும் நிறைவு செய்துவிட்டார்கள். பண பலம் மற்றும் படை பலம் உடையவர்கள்.

இதன்பிறகு, பாஜக தலைமையிலும், அதிமுக தலைமையிலும் இரு பெரிய கூட்டணிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் பாஜகவின் செயல்பாடு என்பது இதுவரை இல்லாத வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.

18 முதல் 35 வயதுடைய இளம் வாக்காளர்கள் 33 சதவிகிதம் இருக்கிறார்கள். மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு. இவர்களுடைய சிந்தனை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அவர்கள் எவ்வித சித்தாந்தப் பிடியும் இல்லாமல் இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மோடியினுடைய ஆட்சியையே பெரும்பாலும் பார்த்துள்ளார்கள்.

நிறைய பேர் 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 2014-ல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து வெளியேறியபோது வெறும் 8, 9 வயதுடையவர்கள்தான் இன்று முதன்முறையாக வாக்களிக்கவுள்ளார்கள். தமிழ்நாட்டில் ஏதோவொரு கட்சி/கூட்டணிதான் முழுமையாக வெல்லும். தொங்கு நிலை என்பது தமிழ்நாட்டில் கிடையாது.

எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். 25 சதவிகித வாக்கு வங்கியை நாங்கள் மிக எளிதாக அடைவோம்.

தொகுப்பாளர்: 25 சதவிகிதம்?

அண்ணாமலை: ஆம்!

தொகுப்பாளர்: 5 மடங்கு அதிகமாக?

அண்ணாமலை: ஆம்!

தொகுப்பாளர்: 500 சதவிகித வளர்ச்சியா?

அண்ணாமலை: ஆம்!

தொகுப்பாளர்: நான் உங்களுக்கு சவால் விடலாமா?

அண்ணாமலை: நான் அதிகாரப்பூர்வமாகவே கூறுகிறேன். ஓர் ஊடகத்திடம்தான் பேசுகிறேன். சொல்வது அனைத்தும் இங்கு பதிவாகிறது. எங்கும் ஓடி ஒழியப்போவதில்லை. தொலைபேசியில் தொடர்புகொள்ளக்கூடிய தூரத்தில் தான் இருக்கப் போகிறேன். வாக்கு எண்ணிக்கையின்போது என்னை அழைத்து நீங்கள் கேட்கலாம். நானும் என்னுடைய அரசியல் நம்பகத்தன்மையை ஒரு முன்னணி ஊடகத்தில் முன்வைக்கிறேன்.

காரணம், நாங்கள் களத்தை சரியாகக் கணிக்கிறோம் என்கிற நம்பிக்கை உள்ளது. 25 சதவிகித வாக்கு வங்கியைக் கடப்போம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in