தமிழகத்தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு!

ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார்கள். இப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது
தமிழகத்தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு!
ANI
1 min read

இன்று காலை (ஜூலை 12) சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார் விசிக தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன். இந்த சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேட்டியளித்தார். அவரது பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு:

`பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், இதை திட்டமிட்டவர்கள், இதை நடைமுறைப்படுத்திய கூலிக் கும்பல் போன்றோரை கைது செய்ய வேண்டும் என்று (முதல்வரிடம்) வலியுறுத்தினோம்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜகவுக்கு இந்த செயல்திட்டம் இருப்பதை அறிய முடிகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட அரசியல் செயல்திட்டம் இருக்க வாய்ப்புள்ளதாக விசிக சந்தேகப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர்தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து சிபிஐ விசாரணை கோரினார். காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு இதை விசாரிக்கக்கூடாது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ இதை விசாரிக்க வேண்டும் என்ற குரல் பாஜகவின் மாநிலத் தலைவரின் குரலாக இருந்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவன விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார்கள். இப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. பாஜக இதில் வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை கோருகிறது. இது போன்ற விவகாரங்கள் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் அநாகரீகத்தின் உச்சம். கருத்தியல் விமர்சனங்களையும், அரசியல் விமர்சனங்களையும் வைக்கலாம், ஆனால் அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் பதற்றத்தை உருவாக்க அவர்கள் நினைக்கின்றனர்.

எனவே சட்ட ஒழுங்கை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று (முதல்வரிடம்) வலியுறுத்தியிருக்கிறோம். சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகளை பாதுகாக்கக்கூடிய கட்சியினரை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாகவும் மனு அளித்துள்ளோம்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in