
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தைப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், அதிமுக அங்கம் வகிக்கும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியேறினர். இதையடுத்து, கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனை, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து, முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினார். ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையில், சமீபத்தில் விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுக இணைய வேண்டும் என்கிறார்கள். அவர்கள் கட்சிக்குத் துரோகம் இழைத்ததற்காக நீக்கப்பட்டவர்கள். அவர்களைச் சேர்க்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று பேசினார். இது அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சி.வி. சண்முகத்தைச் சந்தித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சி.வி. சண்முகம் இல்லத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரன், அவருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிகிறது. அதன் பின் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
“நான் திருச்சி சென்று கொண்டிருக்கிறேன். சி.வி. சண்முகம் என் தம்பி. நட்பின் அடிப்படையில் அவரைச் சந்தித்தேன். நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள்தானே. நான் எந்தக் கட்சியில் இருந்தாலும் இவரைச் சந்திப்பேன். கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் சி.வி. சண்முகத்தைச் சந்திப்பேன். எங்கள் இருவருக்கும் இடையில் அரசியலே கிடையாது.”
என்று கூறினார்.