கோப்புப்படம்
கோப்புப்படம்

கரூர் துயரத்தில் அரசியல் விளையாட்டைத் தொடங்கிய பாஜக: திருமாவளவன் | Karur | Karur Stampede |

"பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது."
Published on

கரூர் கொடுந்துயரத்தில் பாஜக வெளிப்படையாக அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கான ஹேமா மாலினி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று தமிழகம் வந்தடைந்த நிலையில், திருமாவளவன் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். நண்பகல் 12 மணிக்கு கரூரில் பிரசாரம் மேற்கொள்வார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரசாரத்தை மேற்கொள்ள அனுமதி வாங்கியிருந்த வேலுச்சாமிபுரத்துக்கு இரவு 7 மணியளவில் தான் சென்றடைந்தார் விஜய். விஜயின் பிரசாரக் கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட, பலருக்கு மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு சார்பில் இதுகுறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விசாரணை அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து ஆராய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஹேமா மாலினி தலைமையில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதன்படி, ஹேமா மாலினி தலைமையிலான குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கோவை வந்தடைந்தார்கள். கோவையிலிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்கிறார்கள்.

பாஜக அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை விமர்சித்து திருமாவளவன் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக.

கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.

இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.

எனவே, ராகுல் காந்தி இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று திருமாவளவன் பதிவிட்டுள்ளார். இப்பதிவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் இணைத்துள்ளார் திருமாவளவன்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கரூர் சென்று தனது ஆய்வைத் தற்போது தொடங்கிவிட்டார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அவருடன் உள்ளார்கள்.

கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்தபோதே, முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புகொண்டு தொலைபேசி வாயிலாகப் பேசிய ராகுல் காந்தி விஜயையும் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.

தற்போதைய நிலவரப்படி தவெகவின் மாவட்டச் செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கரூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Karur | Karur Stampede | TVK Vijay | Vijay | Mathiyazhagan | Thirumavalavan | VCK | Hema Malini Committee | BJP Committee | BJP | NDA Committee | Congress | Rahul Gandhi |

logo
Kizhakku News
kizhakkunews.in