
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை விசாரித்து பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தமிழகம் வந்த பாஜக விசாரணை குழு தெரிவித்துள்ளது.
கரூரில் தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு தவெக நிர்வாகிகள் இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரிக்க நடிகையும் எம்.பியுமான ஹேமா மாலினி தலைமையில் 8 பேர் கொண்ட விசாரணை குழுவை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அப்ரஜிதா சாரங்கி உட்பட 8 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று கரூரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ள பாஜக விசாரணை குழு கோவை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ஹேமா மாலினி கூறியதாவது:-
“வணக்கம் நான் ஹேமா மாலினி. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். எங்கள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 8 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவை அமைத்திருக்கிறார். நாங்கள் அனைவரும் இங்கே வருகை புரிந்துள்ளோம். எங்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் இருக்கின்றனர். கரூருக்கு நேரில் செல்கிறோம். சம்பவம் எப்படி நடந்தது என்பது தொடர்பாக விசாரிக்க உள்ளோம். முதலில் உறவுகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளோம். மேலும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க இருக்கிறோம். அதன்பிறகு உங்களை சந்திக்கிறோம்”
என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “நாங்கள் இன்னும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கவில்லை. நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அனுப்பப்பட்டுள்ள 8 எம்.பிக்களைக் கொண்ட குழு. நாங்கள் கரூர் உள்ளூர் மக்கள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து, சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறோம். பின்னர் அதுகுறித்த விரிவான அறிக்கையைப் பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் சமர்ப்பிப்போம். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது. தற்போது நடந்துள்ள சம்பவத்தில் இருந்து தவறு எங்கே நடந்திருக்கிறது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் இங்கு அந்த முக்கிய நோக்கத்துடன் தான் வந்திருக்கிறோம். நேற்று மதியம்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உடனே, நாட்டின் பல மூலைகளில் இருந்து எம்.பிக்கள் வருகை தந்துள்ளோம்.”
இவ்வாறு கூறினார்.