கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நிபந்தனையில்லாமல் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நிபந்தனையின்றி வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறியதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கோவையின் வளர்ச்சிக்காக மட்டுமில்லாமல் ஈரோடு, திருப்பூர், நீலகிரியின் வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவையாக இருந்தது கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள். கோவை விமான நிலையத்தை சர்வதேச தரத்திலான விமான நிலையமாக மாற்ற மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுப்பதில் தாமதம் செய்து வந்தது.
தற்போது தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு கொடுத்து முடித்துள்ளது. விமான நிலையத்தை மேம்படுத்துவதை தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்தாலும்கூட, மாநில அரசையும் ஒரு பங்குதாரராகச் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக, இத்தனை நாள்கள் மத்திய அரசு மேற்கொள்ளவிருந்த அந்தப் பணிகள் தொய்வுற்று இருந்தன.
இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்ல செய்தியைக் கொடுத்துள்ளார். ஒரு விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலங்களைக் கொடுக்கும்போது, மாநில அரசு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அதை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதன்பிறகு, மத்திய அரசு விமான நிலையத்தை மேம்படுத்தும். தமிழ்நாடு அரசு இதுநாள் வரை வைத்திருந்த நிபந்தனையை விலக்கியுள்ளது. நாடு முழுவதும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு அல்லது புதிதாக விமான நிலையம் அமைக்க ஒரு மாநில அரசு எப்படி நிலங்களைக் கொடுக்கிறதோ, அதுபோல தமிழ்நாடு அரசும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலங்களைக் கொடுக்கத் தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது மிக நீண்ட வருடங்களாகக் காத்திருந்த பல்வேறு தரப்பு மக்களுக்கும், தொழில் துறையினர், மாணவர்கள், சுற்றுலாத் துறை என அனைத்துத் துறைக்கும் நல்ல செய்தியாக உள்ளது. நல்ல முடிவை எடுத்துள்ள முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி" என்றார் வானதி சீனிவாசன்.