அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்: எடப்பாடி பழனிசாமி

"கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரைவிட 1.18 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டதாக அண்ணாமலை ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அதிமுக 3-வது அல்லது 4-வது இடத்தை பிடித்திருக்கும் என்ற கருத்தை அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் மெத்த படித்தவர். மிகப் பெரிய அரசியல் ஞானி. அவருடையக் கணிப்பு அப்படி இருந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி வருகிறது. இதில் அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுமார் 6,800 வாக்குகள்தான் குறைவாகப் பெற்றுள்ளார்.

ஆனால், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு பல்வேறு காரணங்களை நாங்கள் எடுத்துக் கூறியிருக்கிறோம்.

விடியா திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பது நாடே அறியும். வாக்காளர்களை ஆடு, மாடுகளைப்போல அடைத்து வாக்காளர்களைக் கொடுமைப்படுத்தி, பணமழை பொழிந்து, பல்வேறு பரிசுப்பொருள்களைக் கொடுத்துதான் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. அப்போது எங்களுடையக் கூட்டணியில் அங்கம் வகித்து, பிரசாரத்துக்கு வந்த அண்ணாமலைக்கும் இது தெரியும். அப்படி இருந்தும் வேண்டுமென்ற திட்டமிட்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றியைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார். ஆனால், உண்மை அதுவல்ல. 2014-ல் பாஜகவோடு பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 2024-ல் பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியிலும் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றன.

2014-ல் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் அதிமுக வேட்பாளரைவிட 42 ஆயிரம் வாக்குகள்தான் குறைவாகப் பெற்றார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரைவிட 1.18 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். அப்படியென்றால் பாஜக எங்கு வளர்ந்துள்ளது?

2014-ல் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 18.80%. தற்போது பாஜக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி 18.28% வாக்குகளையே பெற்றுள்ளது. இது 0.52% வாக்குகள் குறைவு.

இவர் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தபோது, மத்திய அரசின் எந்தத் திட்டத்தை தமிழ்நாட்டுக்காகக் கொண்டு வந்தார்? எதுவும் கிடையாது. வாயில் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார். எப்போதும் பொய்ச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். மற்ற கட்சிகளைக் குறித்து அவதூறாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட தலைவர் பாஜக மாநிலத் தலைமை பொறுப்பில் இருப்பதால்தான், 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற பாஜக சரிவைச் சந்தித்து கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளது" என்றார் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்குத் துணிச்சல் இல்லை என அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in