பாஜகவிடம் வளர்ச்சிக்கான கனவு இருக்கிறது: தமிழ்நாட்டில் ராஜ்நாத் சிங் பிரசாரம்

"ஹிந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள்."
பாஜகவிடம் வளர்ச்சிக்கான கனவு இருக்கிறது: தமிழ்நாட்டில் ராஜ்நாத் சிங் பிரசாரம்
படம்: https://twitter.com/rajnathsingh

பாஜகவிடம் வளர்ச்சிக்கான கனவு இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வந்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

"நாட்டின் வளர்ச்சிக்கு பாஜகவிடம் கனவும், திட்டமும் உள்ளது. இண்டியா கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே அவர்களுக்குள் சண்டை வருகிறது. அதிகாரத்துக்காகவே அவர்கள் ஒன்றிணைந்துள்ளார்கள். நாங்கள் நாட்டுக்கு முன்னுரிமை என்றால், அவர்கள் குடும்பத்துக்கு முன்னுரிமை என்பார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதற்கும் கட்சத்தீவை இலங்கையிடம் இழந்ததற்கும் திமுக, காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸ் இந்த நாட்டில் நிறைய தவறுகளைச் செய்துள்ளது. இதற்கு இந்தியாவும், மீனவ மக்களும் தக்க பதிலடியைத் தர வேண்டும்.

டெங்கு, மலேரியாவைப் போல சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். இதுபோன்ற வெட்கத்துக்குரிய கருத்தைப் பேசியதற்காக திமுகவை மன்னிக்க முடியுமா? இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பாஜகவை எதிர்க்கும்போது ஹிந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்தார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஏப்ரல் 19-ல் திமுகவுக்கு எதிராக வாக்களித்து பெண்கள் அவர்களைத் தண்டிக்க வேண்டும்" என்றார் ராஜ்நாத் சிங்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in