பாஜக திமுக இடையே ரகசிய உறவு உள்ளது என்று குற்றம்சாட்டி பேட்டியளித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
இன்று (ஆகஸ்ட் 18) மதியம், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியவை பின்வருமாறு:
`நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைத் திறந்துவைத்தார். அம்மா முதல்வராக இருந்தபோது அத்திக்கடவு-அவிநாசி திட்டம நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டார்கள். அவரது மறைவுக்குப் பிறகு, முழுக்க முழுக்க மாநில நிதியைக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 90 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீதமிருந்த 10 சதவீத பணிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அந்த நாணயம் (கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்) ஹிந்தியில் வெளிவருகிறது என்று தெரியும். தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு 300 தடவை சொல்லும் ஸ்டாலின், இன்று ஹிந்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்? ஏனென்றால் அவரது தந்தை பெயரில் அந்த நாணயம் வெளிவருகிறது. அவரது குடும்பத்துக்கு என்றால் அது குறித்து கவலைப்படமாட்டார்.
திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஆகஸ்ட் 15-ல் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்தார். இதை அடுத்து கருணாநிதியின் நாணயம் வெளியிடப்படும் விழாவில் நாங்கள் பங்கேற்போம் என்று அறிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, நீங்களும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.
உடனே ஆளுநரின் தேநீர் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக புறக்கணிக்கும் என்று அறிவித்துவிட்டு, முதல்வர் பங்கேற்கிறார். முதல்வர் ஸ்டாலின்தான் திமுகவின் தலைவர், அப்படியென்றால் ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்துகொண்டதுதானே? ஆக இரட்டை வேடம் போடும் கட்சி திமுக’.