தமிழ்நாட்டுக்கான பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று தேர்வு!

பாஜக, காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக்கள் இன்று கூடுகின்றன.
தமிழ்நாட்டுக்கான பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று தேர்வு!

பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மத்திய தேர்தல் குழுக்கள் இன்று மாலை கூடுகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு கடந்த மார்ச் 2-ல் கூடியது. இதைத் தொடர்ந்து, 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முதற்கட்ட பட்டியலில் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கடந்த மார்ச் 8-ல் 39 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலும் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர்கள் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படவுள்ள நிலையில், இதில் தமிழ்நாடுக்கான அறிவிப்பு இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொண்டர்களிடமிருந்து பெற்ற 39 தொகுதிகளுக்கான விருப்பப் பட்டியலை, தமிழக பாஜக தேர்தல் குழு தில்லியிலுள்ள பாஜக தலைமையிடத்தில் கடந்த வாரம் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் மத்திய தேர்தல் குழு இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

கடந்த சனிக்கிழமை சென்னை வந்த காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு, திமுகவிடம் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது. திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இது இறுதியானதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

பாஜக: உத்தரப் பிரதேசத்தில் 51 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 24 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 20 தொகுதிகள், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15 தொகுதிகள், கேரளத்தில் 12 தொகுதிகள், தெலங்கானாவில் 9 தொகுதிகள், அசாம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் தலா 11 தொகுதிகள், தில்லியில் 5 தொகுதிகள், உத்தரகண்ட்டில் 3 தொகுதிகள், அருணாச்சலப் பிரதேசதம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 2 தொகுதிகள் மற்றும் கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் மற்றும் டயூவில் தலா 1 தொகுதி என 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

காங்கிரஸ்: கேரளத்தில் 19 தொகுதிகள், கர்நாடகத்தில் 7 தொகுதிகள், சத்தீஸ்கரில் 6 தொகுதிகள், தெலங்கானாவில் 4 தொகுதிகள், மேகாலயாவில் 2 தொகுதிகள் மற்றும் நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் மற்றும் லட்சத்தீவுக்கு தலா 1 தொகுதி என 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in