

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது பாஜக. 2029 மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாடு மிக முக்கியம் என்பதால், இந்தத் தேர்தலில் வெற்றியை பெற்றே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது பாஜக.
இந்தத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைப் பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோரை நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூவருமே மத்திய அமைச்சர்கள். பியூஷ் கோயல் மத்திய வர்த்தகத் துறை மற்றும் தொழில் துறை அமைச்சராக இருக்கிறார். அர்ஜுன் ராம் மேக்வால் சட்டத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். முரளிதர் மோஹோல் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
மூன்று மத்திய அமைச்சர்களைக் களத்தில் இறக்கியுள்ளதன் மூலம், பாஜகவின் முனைப்பு வெளிப்படுகிறது. இவர்களுடைய நியமனம் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருவதாகவும் ஜெ.பி. நட்டாவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் தில்லி சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். இதற்கு முன்னதாக சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புகள் மூலம் அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவே செய்திகள் வெளிவரத் தொடங்கின. அதிமுக கூட்டணியில் பாஜக ஏறத்தாழ 50 தொகுதிகளைக் கேட்பதாகவும் அந்தத் தொகுதிகளின் பட்டியல் என்ன என்பதும் ஊடகங்களில் செய்தியாக வந்துகொண்டிருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார்.
இவற்றுக்கு மத்தியில் தான் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் தமிழ்நாட்டுக்கான தேர்தல் பொறுப்பாளராக வைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டார். இணை பொறுப்பாளராக முரளிதல் மோஹோல் நியமிக்கப்பட்டார். அசாமிலும் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதை ஒட்டி, வைஜெயந்த் பாண்டா அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
BJP In-Charge | Tamil Nadu Election | Assembly Election | BJP | Piyush Goyal | Election 2026 | Arjun Ram Meghwal | Murlidhar Mohol |