ECI திருச்சபை பேராயர் எஸ்ரா சற்குணம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
86 வயதான ECI திருச்சபையின் முதல் பேராயரான எஸ்ரா சற்குணம் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று (செப்.22) இரவு சென்னையில் காலமானார். அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1938-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த எஸ்ரா சற்குணம், இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ECI திருச்சபையின் முதல் தேசியத் தலைவராக எஸ்ரா சற்குணம் செயல்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் ECI திருச்சபையின் செயல்பாடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு பல கிறிஸ்துவ தேவாலயங்கள் கட்டப்பட்டன.
இறைபணியில் ஈடுபட்டு வந்தாலும் அரசியல் வட்டத்திலும் அதிகமாக அறியப்பட்ட நபராக இருந்தார் எஸ்ரா சற்குணம். குறிப்பாக மறைந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு நெருங்கிய நபராக அவர் அறியப்பட்டார். சில மாதங்களுக்கு முன் இவரது 86-வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
எஸ்ரா சற்குணத்தின் தலைமையில் ECI திருச்சபையின் கீழ் சுமார் 10,000 கிறிஸ்துவ தேவாலயங்கள் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டன. அத்துடன் விளிம்பு நிலை மக்களுக்குப் பயன்படும் வகையில் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி மையங்கள் அவரால் அமைக்கப்பட்டன.
சமூக-கலாச்சார பிரச்னைகள், இறையியல், தேவாலயங்கள் போன்றவை குறித்து எழுதியுள்ளார் சற்குணம். மேலும் இவரது மத, சாதிய ரீதியிலான கருத்துகள் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளன.