பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றம்: பேரவை ஒத்திவைப்பு!

என்னுடைய சிந்தனையும், செயலும், தமிழையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் சுற்றுச்சுற்றி வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றம்: பேரவை ஒத்திவைப்பு!
1 min read

சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறின. இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் 2 சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜன.11) நிறைவேறின.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு,

`எங்களுக்கு வாக்களித்த மக்களாக இருந்தாலும், வாக்களிக்காத மக்களாக இருந்தாலும் எங்கள் மனசாட்சிதான் நீதிபதி. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் முழு உழைப்பைத் தந்து நாங்கள் ஆட்சி நடத்தி வருகிறோம். அடுத்து அமையப்போவதும் திமுக அரசுதான். அதில் எங்களுக்கு இம்மியளவும் சந்தேகம் இல்லை.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் தமிழ்நாட்டை மேம்படுத்தும் தொண்டை மேல்போட்டுக்கொண்டு அதே பணியாக இருப்பவன். இதைத் தவிர எனக்கு வேறு பணிகள் இல்லை. என்னுடைய சிந்தனையும் செயலும் தமிழ்நாடு தமிழ்நாடுதான். தமிழையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் சுற்றுச்சுற்றி வருகிறது.

நான் பிறந்தபோது ஸ்டாலின் என பெயர் சூட்டிய தலைவர் கலைஞர், வளர்ந்தபோது உழைப்பு என்று பெயர் சூட்டினார். அவர் அப்படி உழைக்கக் கற்றுக்கொடுத்தார். ஓய்வெடுத்து உழையுங்கள் என ஆலோசனை கூறுபவர்களிடம், ஓய்விற்கே ஓய்வு கொடுத்தவரின் மகன் நான் என்று கூறுவேன். தலைவர் பாதையே வெற்றிப்பாதை எனச் செயல்படக்கூடியவன்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய இரு தலைவர்களும் உருவாக்கிக்கொடுத்த கொள்கையைக் காப்பேன். தமிழனத் தலைவர் கலைஞர் அடித்தளமிட்ட நவீன தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக, முன்னொடி மாநிலமாக உயர்த்திக்காட்டுவேன். மக்களாட்சி காலத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று வரலாறு பதிவு செய்யும்’ என்றார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது. இதனை அடுத்து தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in