விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்படும் என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 அன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட காவல் துறை அண்மையில் அனுமதி வழங்கியது. மொத்தம் 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று காவல் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநாடு குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மாவட்டவாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன்பகுதியாக சென்னை தெற்கு மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், மாநாட்டில் பங்கேற்குமாறு நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
மாநாட்டுக்கு வரும்போது மிகுந்த பாதுகாப்புடன் வர வேண்டும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று ஆனந்த் கேட்டுக்கொண்டார். மதியம் இரண்டு மணிக்குள் மாநாட்டுக்கு வந்துசேர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு என்பதால், இது வெற்றி மாநாடாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவர், அனைவரும் ஒழுக்கத்துடன் வந்து மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக்கொடுக்க வேண்டும் என்றும் பேசினார்.
இதனிடையே, மாநாட்டுக்காக அடுத்த வாரம் பூமி பூஜை போடப்படவுள்ளதாகவும் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவித்தார்.