
தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு, பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உப பாண்டவம், யாமம், இடக்கை, உறுபசி, எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா, மண்டியிடுங்கள் தந்தையே என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது சஞ்சாரம் நாவலுக்காக, கடந்த 2018-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
தமிழக முற்போக்கு சங்கத்தின் சிறந்த நாவல் விருது, தமிழக தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான விருது, தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, ஞானவாணி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
எஸ். இராமகிருஷ்ணனின் படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன், அரபு, ஸ்பானிஷ் போன்ற பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளன.
இந்நிலையில், தங்களின் தாய்மொழி மூலம் இந்திய இலக்கியதற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பாரதிய பாஷா விருது, எஸ். ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழா வரும் மே 1-ம் தேதி, கொல்கத்தாவில் உள்ள பாரதிய பாஷா பரிஷத் அரங்கில் நடைபெறவுள்ளது. ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுப் பத்திரமும் அவருக்கு வழங்கப்படும்.