
பணமோசடி வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட அடுத்த நாள் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்ற விவகாரத்தை முன்வைத்துக் கேள்வி எழுப்பியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்.26-ல் ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து செப்.29-ல் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் செந்தில் பாலாஜி.
இந்நிலையில், அமைச்சர் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் வழக்கில் சம்மந்தப்பட்ட சாட்சிகள் மீது செந்தில் பாலாஜி அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (டிச.2) நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜார்க் ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ஓகா, `நாங்கள் ஜாமின் வழங்கியதற்கு அடுத்த நாள் நீங்கள் அமைச்சராகப் பதவியேற்கிறீர்கள். இதன் மூலம் மூத்த கேபினட் அமைச்சர் என்ற உங்களது பதவியால் உங்களுக்கு எதிராக சாட்சிகள் அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என எவரும் நினைப்பார்கள். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?’ என்றார்.
அதேநேரம், செந்தில் பாலாஜிக்கு வழக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய முடியாது என அறிவித்த நீதிபதிகள், வழக்கின் சாட்சிகள் செந்தில் பாலாஜியால் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனரா என்பது குறித்து மட்டும் விசாரணை நடைபெறும் என அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 13-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.