உத்தரகண்ட் மாநிலத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களை மீட்ட நடவடிக்கை எடுத்து அவர்களுடன் கைபேசி வாயிலாக உரையாடினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்துக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்ற 30 நபர்கள் அங்குள்ள ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நேற்று (செப்.14) சிக்கினார்கள். இந்தத் தகவல் கிடைத்ததும் அம்மாநில அரசு அதிகாரிகளிடம் பேசி நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து நிலச்சரிவில் இருந்து முதற்கட்டமாக மீட்கப்பட்ட பராசக்தி என்பவருடன் முதல்வர் ஸ்டாலின் கைபேசி வாயிலாக உரையாடிய காணொளி வெளியானது. அதில், `உங்களுடைய உதவி இல்லாமல் எங்களால் மீண்டிருக்க முடியாது தற்போது மருத்துவச் சிகிச்சையில் இருக்கிறோம்’ என்று முதல்வரிடம் கூறினார் பராசக்தி.
இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், `தைரியமாக இருங்க, எல்லாரிடமும் நான் பேசினேன்னு சொல்லுங்க. அங்க இருக்கும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் நான் தொடர்பில் இருக்கிறேன்’ என்றார்.
இந்த நிகழ்வு தொடர்பாக தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், `உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்!’ என்றார்.
`உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் சிக்கியுள்ளனர் என்ற செய்தியை அறிந்ததும், தமிழக முதல்வர் அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தூரிதமாக நடவடிக்கை எடுத்தார். அவர்களிடம் கையேசி வாயிலாகப் பேசினார்.
முதல்வருக்கு எங்கள் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணியில் மூன்று ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன’ என்று புதிய தலைமுறைப் பேட்டியளித்தார் தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.