
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறுமா என்பது பற்றி வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா விளக்கியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"இன்று அக்டோபர் 21 காலை 5.30 மணியளவில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அது காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அக்டோபர் 22 அன்று மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்பு உண்டு.
அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது அக்டோபர் 23 அன்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையவும் வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இது புயலாக மாறுமா என்பதை நாளை ஓரளவுக்குச் சரியாகச் சொல்ல முடியும்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், அரபிக்கடல் பகுதிகளிலே நேற்று தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றெழுத்தத் தாழ்வுப் பகுதி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில மழையின் தரவுகளைப் பார்த்தால், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலுமே மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்டைந்துள்ளது.
நான்கு இடங்களில் மிகக் கன மழை பதிவாகி உள்ளது. அதிக அளவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சி மடத்தில் 17 செ.மீ., பாம்பன் 15 செ.மீ., மண்டபம் 14 செ.மீ., வரட்டுப்பள்ளம் (ஈரோடு மாவட்டம்) 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், 22 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது.
இன்றைய தேதி வரைக்கும் அதாவது வடகிழக்குப் பருவமழை காலம் என்று சொல்லக்கூடிய அக்டோபர் 1 முதல் இன்று (அக்டோபர் 21) வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 16 செ.மீ.
இயல்பிலிருந்து 59% அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது. இதில் 16 மாவட்டங்கள் இயல்பு, இயல்பை விட மிக அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான அறிவுறுத்தல்
அக்டோபர் 21 காலைக்குள் ஆழ்கடலிலிருந்து கரைக்கு வராத மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்றிலிருந்து (அக்டோபர் 21) அக்டோபர் 26 வரை சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
எந்தெந்த பகுதிகள்?
அக்டோபர் 21 அன்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி, அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதி, தெற்கு அந்தமான் பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், லச்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்.
அக்டோபர் 22 அன்று தமிழகக் கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், அரபிக் கடல் பகுதிகள்.
அக்டோபர் 23 முதல் அக்டோபர் 26 வரை அரபிக்கடல் கடல், வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்." என்றார் அமுதா.
Rain Alert | Chennai Rain | Chennai Rains | Weather Report | Weather Alert | IMD Chennai | RMC Chennai | Bay of Bengal | Low Pressure | Low Pressure Area | Arabian Sea | Andaman Sea |