
மகப்பேறு விடுப்பு என்பது மகப்பேறு சலுகைகளின் அங்கம் என்றும், பெண்களின் இனப்பெருக்க உரிமைகளின் முக்கியமான ஒரு பகுதி என்றும் உச்ச நீதிமன்றம் இன்று (மே 23) தீர்ப்பளித்துள்ளது. எந்தவொரு நிறுவனமும் ஒரு பெண்ணின் மகப்பேறு விடுப்பு உரிமையைப் பறிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறுமணம் செய்துகொண்ட தமிழக அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருக்குக் குழந்தை பிறந்த நிலையில், அவருக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியை தாக்கல் செய்த மனுவின் பேரில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முதல் திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் பெற்றதாகக் கூறி, தனக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டதாக அந்த ஆசிரியை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அரசு அலுவலர்களின் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு சலுகைகள் வழங்கப்படும் என்ற விதி தமிழ்நாட்டில் அமலில் உள்ளது.
முதல் திருமணத்தின் மூலம் தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபோது மகப்பேறு விடுப்பு அல்லது அதற்கான சலுகைகள் எதையும் பெறவில்லை என்று மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தனது மறுமணத்திற்குப் பிறகுதான் அரசுப் பணியில் சேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி. முத்துக்குமார், அமலில் உள்ள விதிகளின்படி மகப்பேறு சலுகைகளை அவர் முன்பு பெறாததால், மாநில அரசின் முடிவு அவரது அடிப்படை உரிமைகளை பாதித்ததாக வாதங்களை முன்வைத்தார்.