
வரும் டிச. 27-ல் தொடங்கும் 48வது சென்னை புத்தகக் காட்சி குறித்து இன்று காலை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தனர் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) நிர்வாகிகள். இதில் வெளியான தகவல்கள் பின்வருமாறு,
48வது சென்னை புத்தகக் காட்சி வரும் டிச. 27-ல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது. இந்த புத்தகக் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.
இந்த தொடக்க விழாவில், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் வழங்குகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் என, டிச. 27 தொடங்கி ஜனவரி 12 வரை மொத்தம் 17 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
புத்தக காட்சியில் விற்கப்படும் அனைத்து நூல்களுக்கும் 10 % கழிவு வழங்கப்படுகிறது. அத்துடன் புத்தகக் காட்சியில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டியுடன் ஒவ்வொரு நாள் மாலையிலும் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைகள் நடைபெறவுள்ளன.
புத்தகக் காட்சிக்காக மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்காக தனி அரங்கு அமைக்கப்படவுள்ளது. புத்தகக் காட்சியின் இறுதி நாளான ஜனவரி 12-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் பங்கேற்கிறார்.