

சென்னை நந்தனத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி, 2026 ஜனவரி 8 அன்று தொடங்கும் என பபாசி அறிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி 7 அன்று தொடங்கி 19 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதியில் மாற்றம் செய்து பபாசி அறிவித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் தமிழ்நாடு மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் ஆர்வமுடன் வந்து மலிவு விலையில் புத்தகங்களை வங்கிச் செல்வர். புத்தகப் பிரியர்களுக்கும் இலக்கிய ரசிகர்களுக்கும் பெரும் திருவிழாவாக திகழும் புத்தகக் காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி 2026 ஆண்டுக்கான பபாசியின் 49-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 8 அன்று தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக பபாசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“49-வது சென்னை புத்தகக்காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2026 ஜனவரி வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடக்கி வைக்கப்பட்டு ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது. தொடக்கவிழா நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். புத்தகக்காட்சி தினமும் காலை 11 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை நடைபெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளை கவிதைக்காக கவிஞர் சுகுமாரனுக்கும், சிறுகதைக்காக ஆதவன் தீட்சண்யாவுக்கும் நாவலுக்காக இரா. முருகனுக்கும், உரைநடைக்காக பேராசிரியர் பாரதிபுத்திரனுக்கும், நாடகத்திற்காக கருணா பிரசாத்துக்கும், மொழிபெயர்ப்புக்காக வ. கீதாவுக்கும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Chennai Book Fair, held annually at Nandanam, Chennai by BAPASI to begin on January 8, 2026. Earlier, it was announced that it would begin on January 7 and continue until the 19th, but now the BAPASI has announced a change in the date.