வரும் டிசம்பரில் தொடங்கும் 48வது சென்னை புத்தகக் காட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி.
கடந்த 1977-ல் தொடங்கி, தலைநகர் சென்னையில் ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 47-வது புத்தகக் காட்சி ஜனவரி 3 தொடங்கி 21 வரை, மொத்தம் 19 நாட்கள் நடைபெற்றது. இதில் சுமார் ரூ. 18 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பபாசி அறிவித்தது.
இந்நிலையில், 48வது சென்னை புத்தகக் காட்சி வரும் டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 வரை, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி அறிவித்துள்ளது.
மேலும், 2025-ம் வருடத்திற்கான 3-வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சி வரும் ஜனவரி 16 முதல் 18 வரை, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று (நவ.19) அறிவித்தார்.
இந்த சர்வதேச புத்தகக் காட்சியில் இத்தாலியின் போலோக்னா குழந்தைகள் புத்தக காட்சி கௌரவ விருந்தினர் அமைப்பாக பங்கேற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.