
வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக மேற்கொள்ளப்படும் பின்னலாடை இறக்குமதிக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உள்நாட்டில் இருந்து திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்கள் குவிந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஆயத்த ஆடைகள் பிரிவில் லூதியானா, சூரத், கொல்கத்தா போன்ற நகரங்கள் தேசிய அளவில் முன்னணி இடத்தில் இருந்தாலும், இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என்றழைக்கப்படும் பெருமையை திருப்பூர் பெற்றுள்ளது. இந்தியாவின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் 90% பங்களிப்பை திருப்பூர் வழங்குகிறது.
2024-25-ம் நிதியாண்டில், ரூ. 39,618 கோடி மதிப்பிலான பின்னலாடை துணிகளை ஏற்றுமதி செய்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது. இது 2023-24-ம் நிதியாண்டில் ரூ. 33,045 கோடியாகவும், 2019-20-ம் நிதியாண்டில் ரூ. 27,280 கோடியாகவும் இருந்ததாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், உள்நாட்டைப் பொறுத்தளவில் பின்னலாடை வர்த்தக்கத்தில் திருப்பூருக்குப் போட்டியாக வங்கதேசம் உருவானது. அண்மைக் காலம் வரை ஆண்டுக்கு சுமார் ரூ. 6,000 கோடிக்கும் அதிகமான பின்னலாடை துணிகளை இந்திய ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு வங்கதேசம் ஏற்றுமதி செய்து வந்தது.
இதற்கிடையே கடந்தாண்டு அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தது முதல், அங்கு அரசியல் ஸ்திரமின்மை நிலவு வருகிறது. மேலும், ஷேக் ஹசீனாவிற்குப் பிறகு பொருளாதார அறிஞர் முஹமது யூனுஸ் தலைமையில் அமைந்த வங்கதேச இடைக்கால அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையிலான அரசுரீதியான உறவுகள் சுமூகமாக இல்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலும், வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பின்னலாடை இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதேநேரம், துறைமுகங்கள் வழியாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குப் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படும் பட்சத்தில் அந்நாட்டுப் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கான செலவினங்கள் உயரும். இத்தகைய காரணங்களால் இந்தியாவில் வங்கதேச இறக்குமதிகள் குறைந்துள்ளன.
இதனால், உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் கவனம் மீண்டும் திருப்பூர் மீது திரும்பியுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டர்கள் குவிந்துவருவதாக திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை உற்பத்தியாளர்கள் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளனர்.