தவெக கொடியில் யானை: விஜய் மீது நடவடிக்கை கோரி பகுஜன் சமாஜ் மனு

"தவெக கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வழி செய்ய வேண்டும்."
தவெக கொடியில் யானை: விஜய் மீது நடவடிக்கை கோரி பகுஜன் சமாஜ் மனு
1 min read

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தியிருக்கும் தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை கட்சித் தலைவர் விஜய் கடந்த வாரம் அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ள கட்சிக் கொடியில் வெற்றியைக் குறிப்பிடும் வகையில் வாகை மலர் மற்றும் இரு போர் யானைகளும் இடம்பெற்றிருந்தன.

கட்சிக் கொடியில் யானை இடம்பெற்றதற்கு தமிழக பகுஜன் சமாஜ் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அஸ்ஸாம் மற்றும் சிக்கிம் தவிர வேறு எந்தவொரு மாநிலத்திலும், எந்தவொரு அரசியல் கட்சியும் யானை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளதாக பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் கூறினார்.

இந்த நிலையில், கொடி விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பகுஜன் சமாஜ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகச் செயலாளர் (தமிழ்நாடு) தமிழ்மதி தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். நீலக் கொடியும் யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும்.

யானை சின்னமானது பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். யானை சின்னத்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுப்பூர்வமான வரலாற்று உறவு உள்ளது. தற்போது தமிழகத்தில் புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது கொடியை அறிமுகம் செய்திருந்தார்.

அதில் எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம் பெற்றுள்ளது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் அது குறித்து எந்தப் பதிலும், நடவடிக்கையும் நடிகர் விஜய் எடுக்காமல் இருக்கிறார்.

அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்ட விரோதமாகவும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் சின்னத்தைத் தனது புதிய கட்சிக் கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்தம் கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க தாங்கள் வழி செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in