கைது நடவடிக்கை: ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரும் பத்ரி சேஷாத்ரி

"தனிமனித உரிமை, சுதந்திரம், கண்ணியம், மதிப்பு ஆகியவற்றுக்கு ஊறு ஏற்படுத்தியதாலும், என் வருமானத்துக்குப் பாதிப்பு...
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பத்ரி சேஷாத்ரி, அவரது வழக்கறிஞர் சந்திரசேகர்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பத்ரி சேஷாத்ரி, அவரது வழக்கறிஞர் சந்திரசேகர்
2 min read

மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டது சட்டத்துக்குப் புறம்பானது எனக் கூறி கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி, தமிழக அரசிடம் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரியுள்ளார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாகக் கடந்த ஜூலை 22-ல், ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு பத்ரி சேஷாத்ரி நேர்காணல் அளித்தார். இந்த நேர்காணலை முன்வைத்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் கவியரசு என்பவர் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஜூலை 27 அன்று 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜூலை 29 அன்று காலை பத்ரி சேஷாத்ரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

குன்னத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் சென்னையிலிருந்து அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். 4 நாள்கள் சிறையிலிருந்த பத்ரி சேஷாத்ரி, குன்னம் குற்றவியல் நடுவர் அளித்த பிணையின் மூலம் விடுதலை செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்ரி சேஷாத்ரி வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பத்ரி சேஷாத்ரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தது.

இந்நிலையில், பத்ரி சேஷாத்ரி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். உடன் அவரது வழக்கறிஞர் சந்திரசேகரனும் இருந்தார்.

அப்போது பத்ரி சேஷாத்ரி கூறியதாவது:

"என்னுடைய கைது, பத்திரிகைச் சுதந்திரத்துக்கும், தனிமனிதச் சுதந்திரத்துக்கும் எதிரானது. தமிழக அரசின் பல்வேறு துறைகள் கூட்டுச் சதியின்மூலம் என்னைச் சிறையில் அடைக்க முயற்சி செய்துள்ளன என்றே நான் கருதுகிறேன். இதனைச் செயல்படுத்த அவர்கள் பல இடங்களில் சட்டத்தை மீறியுள்ளனர். எனக்கு நடந்தது போலவே தினம் தினம் யாராவது ஒருவர் தமிழகத்தின் ஏதோ ஓர் ஊரில் கைது செய்யப்படுகிறார். இந்தக் கைதுகள், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறாகவும் தமிழக அரசின் அரசாணைக்கு மாறாகவும் நிகழ்கின்றன.

எனக்கு அநீதி இழைக்கப்பட்டதால் தமிழக அரசுக்கும், தமிழகக் காவல் துறைக்கும் எதிராக வழக்குத் தொடுக்க உள்ளேன். முதற்கட்டமாக தமிழக அரசு, தமிழக உள்துறைச் செயலர், தமிழகக் காவல் துறை டிஜிபி, குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.

அவர்கள் தரும் பதிலை அடுத்து என்னுடைய அடுத்தக்கட்ட நீதிமன்றச் செயல்பாடுகள் இருக்கும்" என்றார்.

மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் உள்பட நான்கு கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

பத்ரி சேஷாத்ரி முன்வைத்துள்ள கோரிக்கைகள்:

  • என்னுடைய கைது குறித்து, காவல் துறை மற்றும் உள்துறையில் துறை சார்ந்த விசாரணை நடந்ததாகக் கேள்விப்படுகிறேன். அந்த விசாரணை அறிக்கையை எனக்குத் தர வேண்டும்.

  • என் தனிமனித உரிமை, சுதந்திரம், கண்ணியம், மதிப்பு ஆகியவற்றுக்கு ஊறு ஏற்படுத்தியதாலும், என் வருமானத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தியதாலும், தமிழக அரசு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும்.

  • சட்டத்துக்குப் புறம்பான என்னுடைய கைது நடவடிக்கையால் சதிச் செயலில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்கள் மீது தமிழக அரசு, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • அஸ்ஃபாக் ஆலம் -எதிர்- ஜார்க்கண்ட் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை 1-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கைது தொடர்பான வழிகாட்டுதல்களைத் தமிழகத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in