அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள்: இபிஎஸ்

"விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதாகவும், மாநிலத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதை ஊடகங்கள், அறிக்கைகள் வாயிலாகவும், சட்டப்பேரவையிலும் புள்ளி விவரத்தோடு பேசியிருக்கிறேன். விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். இதுதொடர்புடைய விசாரணையில் குற்றவாளி யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாள்களுக்கு முன்பு சேலத்தில் முன்னாள் மண்டலக் குழுத் தலைவர் சண்முகம், இரவில் வீட்டுக்குச் செல்லும்போது திமுக நிர்வாகிகள் கூலிப் படை மூலம் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்கள்.

இரு நாள்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்றுள்ளது. இவருடையத் தொகுதியில் மாநகர் பகுதியில் ஒரு தேசியக் கட்சியில் மாநிலத் தலைவராக இருக்கக்கூடிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றால், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதைதான் பார்க்க முடிகிறது. சட்டம் - ஒழுங்கு படுபாதாளத்தில் சென்றுகொண்டுள்ளது. மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in