
அக்டோபர் 18 மற்றும் அக்டோபர் 24 ஆகிய நாள்களில் இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா, வடகிழக்குப் பருவமழை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
"தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதியிலிருந்து இன்று விலகியுள்ளது. அதேசமயம் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரள மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளது.
எங்கெல்லாம் மிகக் கனமழை பெய்தது?
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் மிகக் கனமழை, 7 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், திருச்செந்தூரில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது. கனமழையைப் பொறுத்தவரை ராணிப்பேட்டை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பதிவாகியிருந்தது.
அக்டோபர் 1 முதல் அக்டோபர் 16 வரை தமிழ்நாட்டில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்றைய தேதி வரையிலான இயல்பு நிலை 7 செ.மீ. அக்டோபர் 1 முதல் அக்டோபர் 16 வரையிலான காலகட்டத்தில் இயல்பிலிருந்து 37 சதவீதம் மழை அதிகமாகப் பதிவாகியுள்ளது.
அடுத்தடுத்து இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அக்டோபர் 18 ஒட்டி, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள தெற்கு கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 24 அன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் சாத்தியம் உள்ளது.
மிகக் கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 18 வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். அக்டோபர் 19 முதல் அக்டோபர் 22 வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
அடுத்த இரு நாள்கள் அக்டோபர் 16 மற்றும் அக்டோபர் 17-ல் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
மாவட்டவாரியாகப் பார்த்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களுக்கு ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 17 மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு கன முதல் மிகக் கனமழை எச்சரிக்கை என்று பார்த்தால் தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 17 அன்று தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் என 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை தரப்பட்டுள்ளது" என்றார் அமுதா.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மேலும் கூறுகையில், "அடுத்த 5 நாள்களுக்கு தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், கேரளக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமானது முதல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றார் அமுதா.
Chennai Rains | Low Pressure | Bay of Bengal |