தாயைப் பிரியும் குட்டி யானைக்கு என்ன நேரும்?

காட்டில் சில நேரங்களில் சிறு குட்டி மிருகங்கள் வழி தவறிப் போக வாய்ப்புண்டு.
தாய் யானையுடன் மீண்டும் சேர்ந்த குட்டி யானை
தாய் யானையுடன் மீண்டும் சேர்ந்த குட்டி யானை
2 min read

காட்டில் சில நேரங்களில் சிறு குட்டி மிருகங்கள் வழி தவறிப் போக வாய்ப்புண்டு. எப்படிச் சில நேரங்களில் சிறுவர்கள் காணாமல் போகிறார்களோ அது போல. ஆனால், மிகவும் அரிதாகத்தான் அது போல நிகழும். இந்தச் சம்பவம் அது போன்ற அரிதான நிகழ்வு தான்.

காட்டில் அலைந்து திரியும் போது, யானைக்கூட்டம் பல தரப்பட்ட வாழிடங்களில் புகுந்து செல்ல நேரிடும். பள்ளங்கள், மேடுகள், சரிவுகள் எனச் செல்லும்போது, சில நேரங்களில், பிறந்து சில நாட்களோ அல்லது மாதமோ ஆன குட்டிகள் பின் தங்கி விட வாய்ப்புகள் அதிகம். அது போன்ற தருணங்களில், பின் தங்கி விட்ட குட்டியைக் கவனிக்காமல் யானைக்கூட்டம் சென்று விடலாம். அது போன்ற சமயத்தில், குட்டி பெருங்குரலில் பிளிறி, முன்னே சென்ற கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கும்; கூட்டம் வந்து குட்டியை அழைத்துப் போகும்.

சில நேரங்களில், குட்டி கவனப் பிசகாக வெகு நேரம் ஒரே இடத்தில் நின்று விட்டாலோ அல்லது வழி மாறிப் போய் விட்டாலோ, கூட்டத்தால் உடனே கண்டு பிடிக்க இயலாமல் போகலாம் அல்லது தேடுதல் பலனின்றிப் போகலாம். குட்டியும் பதற்றத்தில் இங்குமங்கும் ஓடி, வெகு தூரம் சென்று விடலாம். இப்படித்தான், சிறு குட்டி கூட்டத்தை விட்டு பிரிய நேரிடும். அந்த நேரங்களில், வனத்துறைப் பணியாளர்கள் பிரிந்த குட்டியைத் தாய் இருக்கும் கூட்டத்துடன் சேர்த்து வைக்க முயலுவர். இது ஓர் அபாயகரமான செயல்பாடுதான் என்றாலும், வேறு நல்ல மாற்று வழி கிடையாது என்பதுதான் நிதர்சனம் என்பதோடு, உகந்த நடவடிக்கையும் ஆகும். ஆனால், யானைக் காட்டில் இது ஒரு பெரிய சவாலான காரியம் தான். வேறு யானைக் கூட்டங்களும் அங்கு இருக்கும்; அவை இடையூறு செய்யலாம்; அல்லது பிரிந்த கூட்டமே தாக்கலாம்!

இந்தச் செயல்பாட்டை திறம்படச் செய்வதில் வல்லவர்கள் நமது பழங்குடியின வேட்டைத் தடுப்புக் காவலர்களும் அனுபவம் வாய்ந்த பழங்குடியின மக்களும். காரணம், அவர்கள் காட்டின் தன்மையை நன்கு அறிந்திருப்பதால் யானைகள் கூட்டம் எங்குச் சென்றிருக்கும் என்று தடயங்களை வைத்து உணர்ந்து அந்த வழியில் சென்று கூட்டத்தைக் கண்டு பிடித்து விடுவர். அதே போல, யானைகளின் இயல்பையும் நன்கு அறிந்திருப்பதால், சரியான முறையில் அணுகி, குட்டியை வெகு லாகவமாக கூட்டத்தின் அருகில் கொண்டு சென்றுவிடுவர். மற்றவர்களால் அந்த அளவுக்கு யானைகளின் இடையே சென்று சுவாதீனமாகப் பணிபுரிய முடியாது! தற்காலத்தில், தொழில் நுட்பம் வளர்ந்து விட்டதால், ட்ரோன் போன்றவற்றின் உதவியோடு யானைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்க முடியும். ஆனால், அந்தக் கூட்டம் தான் குட்டியைப் பிரிந்து சென்றதா என்பதை நாம் அறிந்து கொள்ள மேலும் முயற்சிகள் செய்ய வேண்டும். ஏனெனில், அதன் கூட்டத்தைச் சேராத குட்டியைக் கூட்டம் புறந்தள்ளி விடும். எனவே, சரியான கூட்டத்தை அறிந்து குட்டியைச் சேர்ப்பது பெரிய சவாலான வேலை.

கூட்டத்தைக் கண்டு பிடித்த பின், குட்டியை வெகு கவனமாக கூட்டத்தின் அருகே சென்று விட்டு விடும் வேலையை எல்லோரும் செய்ய இயலாது. ஏனெனில், குட்டி பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு இருக்கும்; யானைக் கூட்டம் குட்டியைக் காப்பாற்ற கொண்டு செல்பவரைத் தாக்க முற்படலாம். எனவே, வெகு ஜாக்கிரதையாக அவர் செயல்பட வேண்டும். கூட்டத்தின் மிக அருகிலும் இல்லாமல், அதே சமயம் வெகு தொலைவிலும் இல்லாமல் இருந்து குட்டியைக் கூட்டத்துடன் சேர்க்க வேண்டும். அவை சேர்ந்த பின், கூட்டம் குட்டியை அனுமதித்து.சேர்த்துக் கொள்கிறதா என்று உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் கூட்டத்தில் இணைந்து குட்டி செயல்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். இப்படி இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்த பின் குட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். இது, அது போன்ற ஒரு ஆபரேஷன் தான். இதில் யானைக் கூட்டதைக் கண்டு பிடிக்க ட்ரோன் பயன்பட்டுள்ளது.

இது போல சேர்க்க இயலாதபோது - ஏனெனில், பிற கூட்டத்தைச் சேர்ந்த குட்டிகளை குறிப்பிட்ட யானை சேர்த்துக் கொள்ளாது - அந்தக் குட்டிகளை யானைகள் முகாமில் வைத்துப் பராமரிப்பார்கள். அது போல வந்த யானைகள் பல இன்றும் தெப்பக்காட்டிலும், ஆனைமலையிலும் முகாம் யானைகளாக இருக்கின்றன (கும்கியாக). சில கோவில் யானைகளாகவும் இருக்கின்றன. இது ஒரு சவாலான மற்றும் ஆபத்தான ஆபரேஷன் என்பதில் ஐயமில்லை.

*

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in