அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்! (வீடியோ) | MK Stalin | Karur |

அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்! (வீடியோ) | MK Stalin | Karur |

"எந்த ஓர் அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்."
Published on

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருச்சி சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் அன்றிரவே சென்னை திரும்பினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்பட கட்சி நிர்வாகிகள் யாரும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை எனக் குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே, விஜயின் பிரசாரக் கூட்டத்தில் சதி நிகழ்ந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை கடந்த இரு நாள்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணொளி வாயிலாக மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

"கரூரில் நடந்தது பெரும் துயரம், கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக் கூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்தக் காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. கணத்த மனநிலையிலும் துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன்.

செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனே அன்றிரவே கரூருக்குச் சென்றேன். குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இறந்து போனவர்களுடைய குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்து, அதை உடனடியாக வழங்கி வருகிறோம் . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சையை வழங்கி வருகிறோம்.

நடந்த சம்பவங்களுக்கான முழுமையான உண்மையான காரணத்தை ஆராய முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில அரசோட அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

இதற்கிடையே சமூக ஊடகங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும் பொய்ச் செய்திகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்த ஓர் அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் நம் தமிழ் உறவுகள். எனவே சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கக்கூடிய நிலையில் பொறுப்பற்ற வகையில் விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கிறேன்.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. எனவே நீதியரசர் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு எல்லா அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோட ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன்.

மனித உயிர்களே எல்லாவற்றுக்கும் மேலானது. மானுட பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை உடன்பாடுகள், தனிமனித பகைகள்னு எல்லாவற்றையும் விளக்கி வைத்துவிட்டு எல்லோரும் மக்களுடைய நலனுக்காக சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு எப்பொழுதுமே நாட்டிற்குப் பல வகையில முன்னோடியாகத்தான் இருந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலேயும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.

நன்றி, வணக்கம்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Karur | Karur Stampede | MK Stalin | TVK Vijay | Vijay |

logo
Kizhakku News
kizhakkunews.in