
11 சுற்றுகளுக்குப் பிறகு நிறைவுபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில், 19 காளைகளைப் பிடித்து முதலிடம் பெற்றார் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக்.
பொங்கல் திருநாளை ஒட்டி, மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்களில் அடுத்தடுத்த நாட்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
இன்று (ஜன.14) காலை 6.30 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கிவைத்தார் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் அமைச்சர் பி. மூர்த்தி. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 2,026 காளைகளும், 1,735 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர்.
அவனியாபுரம் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினார்கள். ஜல்லிக்கட்டைக் காண மதுரை மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இந்த நிகழ்வில் சிவகங்கை ஆவாரங்காடு காளையை அடக்கி ரூ. 1 லட்சம் மற்றும் 2 தங்கக் காசுகளைப் பரிசாகப் பெற்றார் அவனியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித். அதேநேரம் இந்தப் போட்டியின் 9-ம் சுற்றின்போது காளை முட்டியதில் படுகாயமடைந்த விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற மாடுபிடி வீரர், சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
11 சுற்றுகளுக்குப் பிறகு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றது. இதில், 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம் பெற்றார். 15 காளைகளைப் பிடித்து 2-ம் இடத்தை அரவிந்தும், 13 காளைகளைப் பிடித்து 3-ம் இடத்தை திருப்புவனம் முரளிதரனும் பெற்றனர்.
சிறந்த காளைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட டிராக்டர் பரிசு, அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் காளைப் பராமரிப்பாளரான மலையாண்டிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த மாடுபிடி வீரருக்குத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட காரை வென்றார் திருப்பரங்குன்றம் கார்த்தி. 2-ம் இடத்தைப் பெற்ற அரவிந்த் திவாகருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.