சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சி பலிக்காது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகம், அரசியல், பொருளாதாரம் என அனைத்து வகையிலும் மேம்பாடு அடையவேண்டும், அதுதான் உண்மையான விடுதலை என அண்ணல் அம்பேத்கர் கருதினார்.
சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சி பலிக்காது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
1 min read

ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் இதுதான் பெரியார் மண்ணா என கேள்வி எழுப்புகின்றனர், இந்த மண்ணில் நான் இருக்கும் வரை மத வெறி, சாதி வெறி சக்திகளின் எண்ணம் நிறைவேறாது என பேசியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

அண்ணல் அம்பேதக்ரின் நினைவு நாளை ஒட்டி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அரசு விழாவில் அவர் பேசியவை பின்வருமாறு,

`இந்தியாவிலேயே முதல் முறையாக 1972-ல் அண்ணல் அம்பேத்கர் பெயரில் அரசுக் கல்லூரி தமிழக அரசால் தொடங்கப்பட்டது. 1989-ல் சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. 1990-ல் அம்பேத்கர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1997-ல் சென்னை சட்டப் பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக நாம் அறிவித்தோம்.

தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், அயோத்தி தாசர் ஆகியோர் காண நினைத்த சமத்துவ சமூதாயத்தை அமைப்பதற்கான பாதையில் பயணிப்பதுதான் நமது திராவிட மாடல் ஆட்சி. ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகம், அரசியல், பொருளாதாரம் என அனைத்து வகையிலும் மேம்பாடு அடையவேண்டும், அதுதான் உண்மையான விடுதலை என அண்ணல் அம்பேத்கர் கருதினார்.

அந்த வழியில் அண்ணல் அம்பேக்தர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது நாடு சுதந்திரத்திற்குப் பிறகு பட்டியலினங்களுக்கும், பழங்குடியினங்களுக்கும் பிரத்யேகமாக தொடங்கப்பட்ட முதல் தொழில் திட்டம். தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நமது திராவிட மாடல் அரசு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தைத் தொடங்கியது.

சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோர் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிடவியல் கோட்பாடுகளை சட்டரீதியாக மாற்றி அந்தக் கொள்கைகளை ஆட்சி முறைகளாக ஆக்கவேண்டும் என நினைக்கிறோம். நம் லட்சிய வழியில் ஒரு சில தடைகள் இருப்பதை நான் மறுக்கவில்லை.

உடனே சிலர் இதுதான் பெரியார் மண்ணா என கேள்வி எழுப்புகின்றனர். இந்த மண்ணில் நான் இருக்கும் வரை மத வெறி, சாதி வெறி சக்திகளின் எண்ணம் நிறைவேறாது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in