இப்போதாவது மறக்காமல் பேசினீர்களே...: ரஜினியிடம் கேலி செய்த அமைச்சர் துரைமுருகன்! | Duraimurugan

"துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்களிலேயே விரலைவிட்டு ஆட்டியவர் அவர்."
இப்போதாவது மறக்காமல் பேசினீர்களே...: ரஜினியிடம் கேலி செய்த அமைச்சர் துரைமுருகன்! | Duraimurugan
2 min read

வேல்பாரி நூல் கொண்டாட்ட விழாவில் ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக, அவரிடம் தொலைபேசியதாகவும் தற்போதாவது மறக்காமல் பேசினீர்களே என்று கூறியதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி பற்றி 'கலைஞர் எனும் தாய்' எனும் நூலை அமைச்சர் எ.வ. வேலு எழுதினார். இந்த நூல் வெளியீட்டு விழா கடந்தாண்டு சென்னையில் நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் அப்போது கலந்துகொண்டார்கள்.

அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டி பேசும்போது, "பள்ளி ஆசிரியர் வரும்போது, அவர்களுக்குப் புதிய மாணவர்கள் பிரச்னையே கிடையாது. எளிதாகச் சமாளித்துவிடுவார்கள். பழைய மாணவர்கள் இருக்கிறார்களே, அவர்களைச் சமாளிப்பது சாதாரண விஷயம் கிடையாது.

இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் சாதாரண பழைய மாணவர்கள் அல்ல. அசாத்தியமானவர்கள். எல்லோரும் தேர்ச்சியடையாமல் ஒரே வகுப்பில் தங்கவில்லை. நல்ல ரேங்க் வாங்கிய பிறகும் வகுப்பைவிட்டு செல்ல மாட்டேன் என அமர்ந்திருப்பவர்கள்.

இவர்களை எல்லாம் சமாளிப்பது சாதாரண விஷயமா? துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்களிலேயே விரலைவிட்டு ஆட்டியவர் அவர்" என்று ரஜினிகாந்த் பேசினார்.

கட்சியிலும் ஆட்சியிலும் மூத்தவர்கள் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்பது போன்ற பெரும் பேச்சுக்கு ரஜினியின் இந்த உரை வழிவகுத்தது.

ரஜினியின் உரைக்குப் பதிலளிக்கும் வகையில் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "மூத்த நடிகர்களுக்கு வயதாகிவிட்டது, பல் விழுந்துவிட்டது, தாடி வளர்ந்துவிட்டது. கடைசி நிலையிலும் நடித்து வருவதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது" என்றார்.

அமைச்சர் துரைமுருகன் தனது நீண்டகால நண்பர், அவரைத் தனக்குப் பிடிக்கும், அவர் என்ன சொன்னாலும் தனக்கு வருத்தம் கிடையாது, அவருடனான நட்பு எப்போதும் தொடரும் என ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.

துரைமுருகனும் அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில், தங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம், தாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம் என்றார்.

இந்தச் சூழலில் தான் அண்மையில் நடைபெற்ற வேள்பாரி நூல் கொண்டாட்ட விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

எ.வ. வேலு நூல் வெளியீட்டு விழாவில் பேசியதற்கு இந்த மேடையில் ரஜினிகாந்த் விளக்கமளித்தார். "நான் பேசும்போது, பழைய மாணவர்களைச் சமாளிப்பது மிகக் கடினம். பள்ளியைவிட்டு, வகுப்பைவிட்டு செல்லவே மாட்டார்கள் என்று கூறினேன். இதைத் தொடர்ந்து, அப்படி இருந்தாலும் கூட வயதானவர்கள் என்றால் அனுபவம்... அனுபவமிக்கவர்கள் எல்லோரும் தூண்கள். அவர்கள் தான் அடித்தளம். அந்த மாதிரியான அனுபவம் இல்லையென்றால் எந்த இயக்கமும் எந்தக் கட்சியும் தேறாது. அது தூண்கள் மட்டுமல்ல, சிகரமும் கூட என்று கூறவிருந்தேன். எல்லோருடைய சிரிப்பிலும் அதை மறந்துவிட்டேன்" என்று ரஜினிகாந்த் பேசினார்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ரஜினி பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "மறந்துவிட்டேன் என்று ரஜினி கூறினார். அதைப் பார்த்தேன். அவரை அலைபேசியில் அழைத்துப் பேசினேன். ரொம்ப நன்றி, இப்போதாவது மறக்காமல் பேசினீர்களே என்றேன்" என்று துரைமுருகன் பதிலளித்தார்.

Rajinikanth | Duraimurugan

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in