கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளன.
யார் இந்த நிர்மலா தேவி?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தேவாங்க கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் நிர்மலா தேவி.
இவர் கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் பலன் பெறும் வகையில் மாணவிகள் மத்தியில் ஆசை வார்த்தைகளைக் கூறி பேசியது தொடர்புடைய ஆடியோ வெளியானது.
இதைத் தொடர்ந்து, கல்லூரியின் செயலாளர் அளித்த புகாரின் பேரில் நிர்மலா தேவி ஏப்ரல் 16, 2018-ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தமிழ்நாடு முழுக்கப் பெரும் பேசுபொருளானது. விளைவு, வழக்கின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதனிடையே, கல்லூரியிலிருந்தும் நிர்மலா தேவி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாகக் கூறி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். வழக்கு விசாரணை சுணக்கம் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. 2021-ல் திமுக ஆட்சி மாறிய பிறகும்கூட, வழக்கு விசாரணை வேகமெடுக்கவில்லை என ஆர்வலர்கள் புலம்பலை வெளிப்படுத்தினார்கள்.
முருகன் மற்றும் கருப்பசாமிக்குப் பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் வரை சென்று இருவரும் பிணையைப் பெற்றார்கள். நிர்மலா தேவிக்கும் ஓராண்டுக்குப் பிறகே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கிடைத்தது. சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், இவருக்குப் பிணை கிடைத்தது.
பிணையில் வெளிவர ரத்த உறவினர்களின் கையெழுத்து அவசியம் என்பதால், பிணை கிடைத்த போதிலும், மார்ச் 2019-ல் சிறையிலிருந்து பிணையில் வெளிவர தாமதம் ஏற்பட்டது. நிர்மலா தேவி சிறையிலிருப்பதையே சிலர் விரும்புவதாக, நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
வழக்குத் தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்புடைய விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெறத் தொடங்கியது.
பிணை கிடைத்தாலும், விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையின்போது இவர் ஆஜராக வேண்டும். இடையில் சில நேரங்களில் நீதிமன்ற வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதைப்போல இவர் நடந்துகொண்டது பேசுபொருளானது. ஒருமுறை சாமி வந்ததைப்போல நடந்துகொண்டார். ஒருமுறை தியானம் செய்தார். ஒருமுறை முடிதிருத்தம் செய்து தோற்றத்தை மாற்றிக்கொண்டு வந்தார். ஒருமுறை நீதிமன்ற வளாகத்தில் மயக்கமடைந்தார் என ஊடகங்களுக்குத் தொடர்ந்து செய்தி கொடுத்து வந்தார்.
இதனிடையே, நவம்பர் 18, 2019-ல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நிர்மலா தேவிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகவில்லை. நிர்மலா தேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பிக்க, மதுரைக் காவல் துறையினர் நவம்பர் 25, 2018-ல் கைது செய்து மீண்டும் சிறையிலடைத்தார்கள். இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், சிறையில் நிர்மலா தேவியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியா குற்றம்சாட்டினார்.
6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 26-ல் தீர்ப்பு வழங்கப்படும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி அறிவித்திருந்தார். ஏப்ரல் 26-ல் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஆஜராக, நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆஜராகவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு ஏப்ரல் 29-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கில் இன்று தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்றம், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு எதிராகப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்தது. அதேசமயம், நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், இவருக்கான தண்டனை விவரங்களை நாளை வெளியிடுகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் ஆளுநர் மாளிகையும் தொடர்புபடுத்தி பேசப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தார். எனவே, பல்கலைக்கழ வேந்தராக இருக்கக்கூடியவே இதுதொடர்பாக விசாரணைக் குழுவை அமைப்பது நியாயமானதாக இருக்காது என்றும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ல் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்குத் தொடர்புடைய சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகை மற்றும் ஒழுங்கு நடவடிக்கையின் நிலவரம் குறித்து தாக்கல் செய்ய அரசுத் தரப்பு வழக்கறிஞர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது. நிர்மலா தேவி, மாணவிகளிடம் ஆசை வார்த்தை காட்டியதோடு நிறுத்திக்கொண்டாரா அல்லது அடுத்தக் கட்டத்துக்குச் சென்று மாணவிகளைச் செயலிலும் ஈடுபட வைத்தாரா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.