

அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த தகவல்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், நீர்வளத் துறை உதவிப்பொறியாளராக கிருஷ்ணகிரியில் பணியாற்றிவரும் காளிப்ரியன் என்பவரின் பணிப்பதிவேடு, சொத்துகள், கடன்கள் ஆகிய விவரங்களைக் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால் இவை அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எனக் கூறி, சீனிவாசனின் விண்ணப்பத்தை நிராகரித்தார் பொது தகவல் அலுவலர். இதனை அடுத்து இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்த சீனிவாசனின் விண்ணப்பம் மாநில தகவல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சீனிவாசன். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையின் இன்று நடைபெற்றது.
வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் சீனிவாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 8-ன் கீழ் அரசு ஊழியர்களின் சில தனிப்பட்ட விவரங்களை வழங்க விலக்களிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அரசு ஊழியர்களின் பணி சார்ந்த விவரங்களையும், சொத்து மற்றும் கடன் விவரங்களையும் வழங்கத் தடை இல்லை’ என்றார்.
விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதி கார்த்திகேயன், `ஊழியர்களின் பணியைப் பாதிக்கும் வகையிலான தகவல்கள் பாதுகாக்கப்பட்டவை. ஆனால் அரசு ஊழியர்களி்ன் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்பதால் அவற்றில் ரகசியம் காக்க முடியாது. ஒருவேளை அவை மறுக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தைத் குறிப்பிட வேண்டும். இந்த விவகாரத்தில் மனுதாரர் அளித்த மனுவை மாநில தகவல் ஆணையம் மீண்டும் பரிசீலித்து 2 மாதங்களில் தீர்வு காண வேண்டும்’ என்றார்.