
டிசம்பர் 9, 10 ஆகிய இரு நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது:
"இன்று முற்பகல் 11 மணியளவில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு, ஏகமனதாக முடிவெடுத்து வரும் 9, 10 ஆகிய இருநாள்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் அரசின் கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வார்.
அன்றைய தினமே அரசு தனித் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. மதுரையில் மத்திய அரசால் கொண்டுவரப்படவுள்ள டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கான உரிமையை மாநில அரசின் அனுமதியைப் பெறாமல் வழங்கியதை எதிர்த்து, இதை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக அரசு தனித் தீர்மானமாக முதல்வர் சட்டப்பேரவையில் கொண்டு வர இருக்கிறார். இந்த தனித் தீர்மானம் முதல் நாள் நடைபெறும்.
இரண்டாவது நாள் விவாதம் நடைபெற்று, பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும். அதுபோல கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இரு நாள்களும் கேள்வி நேரம் நடைபெறும்" என்றார்.
முன்னதாக, மதுரையில் ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்ட்ன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். லண்டனிலிருந்து தமிழகம் திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரையில் டங்ஸ்ட்ன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசுதான் என்றும் இந்த விவகாரத்தில் திமுக அரசு நாடகமாடுவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.