
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் அப்பகுதி மக்களை நாளை (ஜன.19) விஜய் சந்திக்கவுள்ள நிலையில், சந்திப்பிற்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. புதிய விமான நிலையத்திற்காக பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் விவசாயம் சார்ந்தது என்பதால், விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 908 நாட்களுக்கும் மேல் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த அக்.27 விக்கிரவாண்டி மாநாட்டில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றும்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கும் வகையில், விஜய் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. போராட்டக் குழுவினரை ஜன.20-ல் சந்திக்க விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டாலும், அதற்குக் காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும்தான் பொதுமக்களை விஜய் சந்திக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை அடுத்து மேல்படவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விஜய் மக்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் வைத்து பொதுமக்களை விஜய் சந்திக்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது.